�நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரித் துறை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமம் வழியாக பிகில் திரைப்படத்தையும், அதன் வழி நடிகர் விஜய்யையும் சென்றடைந்த ஐடி ரெய்டு பல சந்தேகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டது.
இவர்களுக்குச் சொந்தமான 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அன்புச்செழியன் தரப்பில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அத்துடன் பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் மீதான விசாரணை முடிவடைந்த பின்னர், இந்த வழக்கு அமலாக்கத் துறையிடம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,