நடிகர் விஜய் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அட்லி, லோகேஷ் கனகராஜ் என இந்த தலைமுறை இயக்குநர்களோடு அடுத்தடுத்து இணைந்து படம் செய்வதில் நடிகர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜூடன் ‘மாஸ்டர்’ பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படம் இயக்கி வெற்றி கொடுத்த நெல்சன் திலீப்குமாருடன் ‘பீஸ்ட்’ படத்திற்காக இணைந்திருக்கிறார் விஜய்.
இந்த திரைப்படம் இந்த மாதம் 13ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரைய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வழக்கமாக விஜய்யின் படங்களுக்கு ஆடியோ லான்ச் நிகழ்வு நடக்கும். அதில் நடிகர் விஜய்யின் மேடை பேச்சு, அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரி, அரசியல் பேச்சு ஆகியவை விஜய் ரசிகர்களிடையே வைரல் ஆகும்.
அந்த வகையில், ‘பீஸ்ட்’ படத்திற்கும் ஆடியோ லான்ச் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடைபெறாமல் போக இப்போது விஜய் சன் டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். பத்தாண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சிக்கு விஜய் தரும் இந்த பேட்டியை ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சனே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேட்டிக்கான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நேருக்கு நேர் அமர்ந்திருக்க, நெல்சன் விஜய்யிடம், ‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுங்க சார்’ என்ற கேள்வியுடன் புரோமோவில் பேட்டியை ஆரம்பிக்கிறார். பிறகு ‘விஜய்யை விஜய்யே பேட்டி எடுத்தால் என்ன கேள்வி கேட்பார்?’, ‘தேர்தல் சமயத்தின் போது வீட்டில் நான்கு கார்கள் இருக்கும் போது எதற்கு சைக்கிளில் போனீர்கள்?’ என்பது போன்ற கேள்விகளை கேட்க விஜய் நெல்சனை ‘ஷூட்டிங் முடிஞ்சிருச்சுன்னு உன் இஷ்டத்துக்கு எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்பியா?’ என ஜாலியாக மிரட்டுகிறார்.
இந்த வாரம் ஞாயிறு இரவு 9 மணிக்கு சன் டிவியில் விஜய்யை நெல்சன் எடுக்கும் பேட்டி ஒளிபரப்பாக இருக்கிறது.
**ஆதிரா**