நடிகர் விஜய் வீட்டில் இன்று(மார்ச் 12) இரண்டாவது முறையாக நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், படத்தின் கதாநாயகன் விஜய், ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் சற்று ஓய்ந்து மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீசுக்காக அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் இன்று(மார்ச் 12) நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் ,[மீண்டும் விஜய் வீட்டில் ஐடி அதிகாரிகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/03/12/43/it-officials-raid-again-in-vijay-home) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சில முக்கியத் தகவல்களை ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று விஜய்யின் பனையூர் வீட்டுக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், ‘கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து நடிகர் விஜய்யின் வருமான வரிக்கணக்குகள் அனைத்தும் மிகச் சரியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மாத சோதனையின் போது வைக்கப்பட்ட சீல்களும் அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்றும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர் படத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ஐடி அதிகாரிகளால் விஜய் அழைத்து வரப்பட்டதும், அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் காரணமாக அமைந்த இந்த சம்பவம் குறித்து விஜய் மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் உரையாற்றுவார் என்று ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு திரைத்துறையினரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இன்னும் இரண்டே நாட்களில் மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ள சூழலில், வருமான வரித்துறையினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,