பீஸ்ட் ரிலீஸ்: உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

Published On:

| By admin

தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் தங்களது கதாநாயகன் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை கோலாகலமான கொண்டாட்ட மனநிலையில் வரவேற்க தயாராகி வருகின்றனர்.

டிக்கெட் என்ன விலை என்றாலும் வாங்கி முதல் காட்சியில் பார்த்துவிட வேண்டும் என்கிற வெறித்தனம் உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 1160 திரையரங்குகளில் 90% திரைகளில் நாளை பீஸ்ட் படம் வெளியாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் திரைகளில் மட்டும் காலை வழக்கமான காட்சி நேரங்களில் பீஸ்ட் காட்சி திரையிடப்படுகிறது.

மற்ற திரையரங்குகளில் காலை 4 மணிக்குச் சிறப்புக்காட்சியுடன் பீஸ்ட் திரையிடல் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 14) வெளியாகும் கேஜிஎஃப் படத்திற்கு தமிழகத்தில் மிக குறைவான திரைகளே ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறுகிறார் அப்படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு. வணிக லாப நஷ்டங்களைப் பார்க்கும் திரையரங்குகள் தமிழக சினிமா ரசிகர்களின் மனநிலை, தேவை என்னவோ அதற்கேற்ப திரையரங்குகளை ஒதுக்கீடு செய்யும்.

அந்த அடிப்படையிலேயே தமிழ் படம், தமிழ் நடிகரான விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு அதிக திரைகள் கிடைத்திருக்கிறது என்கிறார் மூத்த விநியோகஸ்தர் மதுரை சரவணன்.

“சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய் கதாநாயகன், வெளியிடுவது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் என்பதால் பீஸ்ட் படத்திற்குத் திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது. படம் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவகையில் அரசு அதிகார மையத்தில் இருப்பவர்கள் என்பதால் அழுத்தம் அதிகமாக இருப்பதால், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்தைக் காட்டிலும் பீஸ்ட் படத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம்” என்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போன்று பீஸ்ட் பீவர் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் அதனை நோக்கி திரையரங்குகளின் கவனம் உள்ளதை வணிகரீதியாகத் தவறு என கூறமுடியாது என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

தற்போதைய நிலவரப்படி பீஸ்ட் வெளியாகும் நாளை ஒரு நாள் மொத்த வசூல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்கின்றனர் வினியோகஸ்தர்கள். மேலும், “இதற்கு காரணம் 10 மடங்கு கூடுதலாக விற்கப்படும் டிக்கெட் விலை என்கின்றனர். இது போன்ற சூழலை தமிழ் சினிமா இதற்கு முன்னர் சந்தித்ததில்லை பீஸ்ட் படத்தைக் காட்டிலும் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவில் ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழகத்தில் குறைவான திரையரங்குகள் கிடைத்திருப்பதால் பலவீனமாக இருக்கிறது என கூறுபவர்கள், ஏப்ரல் 13 அன்று பீஸ்ட் படத்திற்கு அதிகாலை சிறப்புக்காட்சியும், அதிகமான காட்சிகள் திரையிடும் திரையரங்குகள் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் கேஎஃப்சி படத்திற்கும் அதே போன்று காட்சிகளை ஒதுக்கீடு செய்து டிக்கெட்களை முழுமையாக விற்பனை செய்து கல்லா கட்டியிருக்கிறார்கள்” என்கின்றனர்.


இந்த நிலையில், மதுரையில் கொட்டும் மழையிலும் பீஸ்ட் திரைப்பட வெளியீட்டிற்காக திரையரங்கை விஜய் ரசிகர்கள் தயார் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் ராட்சத பேனர் மற்றும் கட்-அவுட்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் உள்ள 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் திரையரங்குகள் விற்பனை செய்து முடித்துள்ளது. ரசிகர்களோ
பீஸ்ட் திரைப்பட வெளியீட்டைத் திருவிழாபோல கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர் .

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக எதிர்பாராத மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் திரையரங்கில் விஜய் உருவம் பதித்த பதாகைகள், வைக்கப்பட்டுள்ள கட்அவுட்-க்கு மாலை அணிவித்தும், வானவேடிக்கையுடன் பீஸ்ட் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.

இந்த வருடம் மதுரையில் சித்திரை திருவிழா அதனையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு வருடங்கள் கழித்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதால் அதிகமான மக்கள் கூட்டம் மதுரை மாநகரை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. இதனால் முதல் வாரம் முழுவதும் திரையரங்குகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் என்கிறார் திரைப்பட வினியோகஸ்தர் மதுரை அழகர்சாமி.

இந்த நிலையில் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஊழியர்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனைத் தவிர்க்கும் வகையில் திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம், பிட்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் ஊழியர்களுக்கு நிறுவனங்களே பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியுள்ளன.

இதேபோன்று பாண்டிச்சேரியிலும் சில நிறுவனங்கள் பீஸ்ட் படம் பார்க்கச் செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளனர்

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share