தமிழ் சினிமாவில் வியாபாரம், வசூல் இவற்றில் கடந்த பத்தாண்டுகளாக முதல் இடத்தில் இருப்பவர் தமிழ் நடிகர் விஜய். வெளிநாடுகள் வியாபாரம், வசூல் இவற்றில் இன்றுவரை ரஜினிகாந்த் முதல் இடத்தில் உள்ளார்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதுவும் கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்ட அடிப்படையில் படப்பிடிப்பை நடத்த இயலாமல் முடங்கியுள்ளது.
இப்படத்திற்குப் பிறகு ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த லலித்குமார் தயாரிப்பில் நன்றிக் கடனுக்காக மீண்டும் நடிக்க உள்ளார். ஏனென்றால் மாஸ்டர் படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் தயாரித்து பட்ஜெட்டை போன்று நான்கு மடங்கு வியாபாரமும் செய்து விஜய்யை வியக்க வைத்தார் லலித்குமார்.
கொரோனா எனும் கொடிய அரக்கன் விஜய்- லலித்குமார் கனவை கலைத்து போட்டது. எப்படி என்றால் நடிகர் விஜய் திரையுலக வாழ்க்கையில் 80 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது மாஸ்டர் படத்தில்தான்.
கொரோனா காரணத்தால் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட மாஸ்டர் பட வியாபார முறைகள் மாறியது. வெளிநாடு, வட இந்திய வியாபார வருவாய் குறைந்தது. இவை எல்லாவற்றையும் சமாளித்து எந்த பிரச்சினையும் இன்றி சொன்னபடி தியேட்டரில் ரிலீஸ் செய்தார் லலித்குமார், அதற்கான நன்றி கடன்தான் லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது.
அதற்குப் பிறகு அவர் நடிக்க 67வது படத்தை பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளாராம். கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கப் போகிறாராம்.
இப்படத்தைத் தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அது மட்டுமல்ல பான்-இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் எண்ணம் உள்ளதாம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை
தொடங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரம் கிசுகிசுக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும் தெலுங்கு, ஹிந்தியில் வெளியானது. ஆனால், தெலுங்கில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இந்தியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் தெலுங்கில் பிரபாஸ், கன்னடத்தில் கேஜிஎப் நாயகன் இருவரும் தங்கள் மாநில மொழி படங்களில் நடித்து அகில இந்திய நட்சத்திரங்களாகிவிட்டார்கள். பாகுபலி, கேஜிஎப் படங்களின் வெற்றிக்கு பின்னர் இந்த படங்களில் நடித்துள்ள கதாநாயகர்களின் படங்கள் அகில இந்திய அளவில் வியாபாரம் பேசப்படுகிறது. அதே போன்று தான் நடிக்கும் படங்களின் வியாபாரம் அகில இந்திய அளவில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற விஜய் விருப்பமே, தில்ராஜு தயாரிப்பில் நடிப்பதற்கு காரணம் என்கின்றனர் விஜய் வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**
�,