விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தக் கட்டமாக, விஜய் 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார்.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் தான் நெல்சன். தற்பொழுது, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படத்தை முடித்திருக்கிறார். டாக்டர் படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் வெற்றி, விஜய் 65 மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். விஜய் 65 படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். எப்படியும், ஏப்ரலில் படம் துவங்கும் என்று சொல்லப்படுகிறது.
விஜய் 65 படம் குறுகிய காலத்துக்குள் முடித்துவிடும் திட்டத்தில் உருவாகிறதாம். அதனால், அடுத்தப் படமான விஜய் 66 படம் குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே துவங்கிப் போய்க் கொண்டிருக்கிறதாம். சமீபத்தில் ஒரு தகவல் வந்தது. என்னவென்றால், பிகில் பட கூட்டணியான அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தையைக் கூட ஏஜிஎஸ் நிறுவனம் நடத்தியது. அதன்பிறகு, எந்த தகவலும் கிடைக்கவில்லை. விஜய்யை இயக்க பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டும் வருகின்றன.
இந்நிலையில், புது அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. விஜய் 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். மாஸ்டரில் லலித்குமாரின் தயாரிப்பு நிர்வாகம், படத்தை விற்பனை செய்த விதத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய். அதோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க பட ரிலீஸூக்கு முன்பே பேசிவந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய்யை சந்தித்த லோகேஷ்கனகராஜ் ஒன்லைன் ஒன்றை கூறியதாகச் சொல்லப்படுகிறது.
லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் விக்ரம் நடிக்க கோப்ரா படத்தையும் தயாரித்துவருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல, கமல்ஹாசன் நடிக்க விக்ரம் படத்தை துவங்க தயார்நிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.
**-ஆதினி**�,