விஜய், விஜய்சேதுபதி நடித்து வெளியான மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அடுத்தப் படமாக கமல்ஹாசன் நடிக்க அனிருத் இசையில் ‘விக்ரம்’ படத்தின் பணிகளில் இருக்கிறார்.
கமல்ஹாசனின் விக்ரம் படமானது பொலிட்டிகல் த்ரில்லர் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்துவிட கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், காலில் செய்த அறுவை சிகிச்சையினாலும், தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாலும் ‘விக்ரம்’ சொன்னமாதிரி துவங்கவில்லை. தேர்தல் முடிந்த கையோடு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் இணைவார் என்பதால் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்னொரு வேலையும் நடுவே போய்க் கொண்டிருக்கிறது. என்னவென்றால், லோகேஷ் கனகராஜின் உதவியாளர்கள் குழுவை இரண்டாகப் பிரித்திருக்கிறாராம். ஒரு குழு விக்ரம் பட பணிகளில் இருக்கிறது. இன்னொரு டீம் விஜய்க்கு கதையொன்றை தயார் செய்துவருகிறதாம்.
விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி என இரண்டு ஹீரோக்களுக்கும் இணையாக கதாபாத்திரத்தை கொடுத்து பெரிய ஹிட்டாக்கிவிட்டார் லோகேஷ். படமும் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. பட ரிலீஸூக்கு முன்பே மீண்டும் விஜய்க்கு படம் பண்ணுவார் என்று சொல்லப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ என ஹிட் கொடுக்கும் இயக்குநர்களுடன் மீண்டும் விஜய் கூட்டணி வைப்பது நடக்கும் விஷயம் தான். அப்படி, விஜய் 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. அதனால், லோகேஷின் ஒரு டீம் விஜய்க்கான கதைக்குப் பணியாற்றிவருவதாகச் சொல்லப்படுகிறது.
கூடுதலாக, நமக்குக் கிடைத்த தகவல்படி, இந்த முறை 100% விஜய் மட்டுமே படம் முழுவதும் இருப்பது போல ஒரு கதையை தயார் செய்கிறாராம் லோகேஷ். இதுவரை ரசிகர்கள் பார்க்காத தோற்றத்தில் விஜய் இந்தப் படத்தில் புது அவதாரம் எடுக்கிறாராம். விஜய் 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தற்பொழுது, நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஜய் 65’ படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். ரஷ்யாவில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. எப்படியும் மே மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று சொல்லப்படுகிறது. அதே, கோடை மாதத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை துவங்குகிறார் லோகேஷ் கனகராஜ்.
– தீரன்
�,