விஜய் நடிப்பில் உருவான 64ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக, விஜய் நடிப்பில் உருவாகும் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கிறது. படத்தில் இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு நாயகியாக அலவைகுண்டபுரமுலோ நாயகி பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக உறுதியாகாத ஒரு தகவலும் இருக்கிறது. தற்போது, படத்தின் லொக்கேஷன் தேர்வுக்காக ரஷ்யா சென்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன். ரஷ்யாவில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உறுதியும் செய்தார்.
முதல்கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் ரஷ்யாவில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், சொன்னபடி படப்பிடிப்பு தொடங்காது என்றே தெரிகிறது. விஜய் 65 படமானது தள்ளிப்போவதாகச் சொல்கிறார்கள். அதற்கு காரணம் இயக்குநர்தானாம்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் டாக்டர். இந்தப் படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இறுதிப் பணிகளையே இன்னும் நெல்சன் முடித்துக் கொடுக்கவில்லையாம். எல்லா பணிகளையும் தாமதப்படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஆக, டாக்டர் படத்தை முடிக்கவே நாட்கள் தேவைப்படுவதால், விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு சொன்ன தேதியிலிருந்து தள்ளிப்போகிறது. அதாவது, ஒரு மாதம் தள்ளிப்போய், மே மாதம் ரஷ்யாவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறதாம் படக்குழு.
மே மாதம் தொடங்கும் படப்பிடிப்பு முடிய எப்படியும் அக்டோபர் ஆகிவிடும். அடுத்த வருட பொங்கலுக்கு மாஸ்டரைப் போல இந்தப் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். எப்படியும், படப்பிடிப்பு தொடங்கும்போதே, ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். எப்படி, தீபாவளிக்கு அண்ணாத்த ரிலீஸை முன்கூட்டியே அறிவித்து முதல் ஆளாக துண்டு போட்டார்களோ, அதுபோல, விஜய் 65 படத்தை பொங்கல் ரிலீஸ் என சன் பிக்சர்ஸ் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.
**- தீரன் **
�,