நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெறுவதையொட்டி அவர்களது திருமணம் பற்றிய பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் வாழ்க்கையை தொடங்குவது பற்றியும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
‘நானும் ரவுடிதான்’ படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பிறகு இந்த ஜோடி காதலில் விழுந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
முதலில் திருப்பதியில் நடப்பதாக இருந்த இவர்களது திருமணம் இப்பொழுது சென்னை மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என பங்கேற்கும் இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், அஜித், நடிகை சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திருமணத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்தினம், விஜய்சேதுபதி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நயன்தாராவுடன் திருமணம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கூறியிருப்பதாவது, ‘இன்று ஜூன் 9, நயன்தாரா என் காதலுடன் இணைகிறேன். கடவுளுக்கும் இந்த உலகத்திற்கும் நன்றி! நான் என் வாழ்வில் மிக சிறந்த ஒரு நபரை சந்தித்துள்ளேன். என் வாழ்வில் உள்ள ஒவ்வொருவரின் நல்ல உள்ளம், நல்ல தருணங்கள், அன்பான பிரார்த்தனைகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் என் வாழ்வை அழகாக்கி உள்ளது. இப்படி எல்லாருடைய அன்பிற்கும் நல்ல பிரார்த்தனைகளுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இது எல்லாவற்றையும் என் காதலான நயன்தாராவிற்கு சமர்ப்பிக்கிறேன். என் தங்கமே! இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நான் உன்னை மணப்பெண்ணாக பார்க்க ஆவலாக மகிழ்ச்சியாகவும் உள்ளேன்.
இனி நம் வாழ்வில் நடக்க இருக்கும் அனைத்து நல்லதிற்கும் கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை எங்கள் அன்புள்ள நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் முன்னிலையில் தொடங்க இருக்கிறோம்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த தம்பதியின் திருமண புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும் தங்கள் வாழ்த்துகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
**ஆதிரா**