கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை இயக்கிய கதையை இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை இயக்கிய கதையை மிகவும் நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனிக்கு பூங்கொத்து கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது. தோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு ஆக்ஷன் சொல்லி நான் இயக்கியது விரைவில் வரப் போகிறது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை விக்னேஷ் சிவனுக்கு தெரிவித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி என செய்திகள் வெளிவர இந்த சந்திப்பு குறித்தும் அவரை இயக்கியது எதற்காக என்பது குறித்தும் விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய அம்மா ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு செக்யூரிட்டி இன்சார்ஜாக இருப்பார். அம்மா இன்ஸ்பெக்டர் என்பதால் அங்கு அனைத்து இடங்களுக்கு போய் வருவதற்கு அவருக்கு அனுமதி உண்டு. அவரிடம் அடிக்கடி நான் தோனியை தூரத்தில் இருந்தாவது பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டே இருப்பேன். அவர் தான் என்னுடைய ரோல் மாடல். அவரின் தீவிர விசிறி, அவருடைய மாணவன் நான். படப்பிடிப்பு தளத்தில் கடினமான சூழ்நிலைகள், வாழ்வில் வெற்றி, தோல்விகள் வரும்போதெல்லாம் அவரைத்தான் நினைத்து கொள்வேன். அவர் எப்படி அந்த சூழலில் நடந்து கொள்வார் என்று யோசிப்பேன். அப்படிதான் நானும் நடந்து கொள்வேன். 100 பேருடன் நீங்கள் தினமும் வேலை பார்க்கும் போது உங்களுக்கு அந்த தலைமைப்பண்பு தேவைப்படும். அது தோனியிடம் இருந்துதான் கற்று கொண்டேன்.
ஒரு நாள் என் அம்மாவுக்கும் தோனியுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு முடியவில்லை. அதனால், அவரை சந்திப்பது என்பது எனக்கு கனவாகவே இருந்தது. வாழ்க்கை மாறியது! இப்பொழுது சிஎஸ்கேவுக்காக தோனியை வைத்து ஒரு சிறிய வீடியோ எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் 36 முறை ஆக்ஷன் சொன்னேன். அவருக்கு ஒவ்வொரு முறை ஆக்ஷன் சொல்லும் போது கடவுளுக்கு நன்றி சொன்னேன். படப்பிடிப்பு இடைவேளையில் என் அம்மா அவருடன் எடுத்த புகைப்படத்தை அவருக்கு காட்டினேன். பிறகு என்னுடைய படப்பிடிப்பில் என் அம்மாவை அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். கடின உழைப்பு என்றுமே தோற்பதில்லை என்பதை உணர்ந்துள்ளேன்’ என்று நெகிழ்ச்சியாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**