துணை நடிகராக இருந்து ‘ திருவண்ணாமலை’ படத்தில் வில்லன் நடிகராக நடித்தவர் விதார்த்.
2010 ல் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் அடித்தது. படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்கத் தயங்காத விதார்த் நடித்து வெளியான படங்களில் ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, காற்றின் மொழி, வீரம், கொடிவீரன் ஆகியவை குறிப்பிடத்தக்கப் படங்களாகும்.
இந்நிலையில், திருவண்ணாமலை படத்திற்குப் பின் மீண்டும் ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
படத்தின் பிரிமீயர் காட்சியின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய விதார்த், இந்தப் படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது நடிப்புத் திறனை மேம்படுத்தவும், வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன்.
சூழ்நிலையை வெல்ல எப்போதும் தந்திரமான முறைகளை நம்பும் பசுபதி எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் பொதுமக்களிடம் தூய்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும், ஆனால் கிராம மக்களிடையே சச்சரவு மற்றும் மோதலை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருக்கும். இயக்குநர் என் கதாபாத்திரத்தில் என்ன எதிர்பார்த்தாரோ அதனை என்னால் முடிந்தவரைக் கொடுத்துள்ளேன், அன்பறிவு படத்தில் பணியாற்றியது மிகவும் அசாதாரண அனுபவமாக இருந்தது, ஏனெனில் அதில் நெப்போலியன் , ஆஷா சரத் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இருந்தனர்” என்றார்.
**-அம்பலவாணன்**
�,