ரசிகர்களுக்காக புதுப்புது இயக்குநர்களை, புதுப்புதுக் கதைகளை தேர்ந்தெடுப்பவர் சூர்யா. சில சறுக்கல்கள் இருந்தாலும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்துவருகிறார். சூர்யாவின் நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
சூரரைப் போற்று முடித்த கையோடு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஒன்று, ஹரி இயக்கத்தில் ‘அருவா’ மற்றொன்று வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’. ஆனால், இவ்விரு படங்களையும் விட்டுவிட்டு நேராக ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார். சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்க சூர்யாவுடன் ப்ரியா அருள்மோகன் நடிக்கிறார். கடைக்குட்டிச் சிங்கம், நம்மவீட்டுப் பிள்ளை மாதிரியான ரூரல் குடும்பக் கதையாக படம் உருவாகிவருகிறது.
அருவா, வாடிவாசல் என்னவானது எனும் கேள்வி எழலாம். ஹரி சொன்னக் கதையில் சூர்யாவுக்கு கருத்துவேறுபாடு இருந்ததால் அருவா நடக்காது எனும் தகவல் முன்னரே வெளியானது. அதுபோல, வாடிவாசல் துவங்கமுடியாததற்கும் காரணம் சொல்லப்பட்டது.
என்னவென்றால், ஜல்லிக்கட்டு குறித்த படமென்பதால் அதிக நடிகர்கள் நடிக்க வேண்டியிருக்கிறதாம். அதனால், கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே படப்பிடிப்பில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால் கொஞ்சம் தள்ளிப் போனது. வாடிவாசல் விட்டுக் கொடுக்க, ஷார்ட் டைமில் ஒரு படமாக சூர்யா 40 படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் சூர்யா.
தற்பொழுது, வாடிவாசல் எப்போது துவங்கும் என்பது குறித்த புது அப்டேட்டும் கிடைத்துள்ளது.சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது. ஏன் செப்டம்பர் ? சூர்யா பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போல, வெற்றிமாறனும் சூரி ஹிரோவாக நடிக்கும் `விடுதலை` படத்தில் பிஸியாக இருக்கிறார். விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை தயாரித்து, இயக்கிவருகிறார் வெற்றிமாறன். ஆக, இந்தப் படத்தின் முழு பணிகளும் முடிய ஆகஸ்ட் ஆகிவிடுமாம். அதனால், வாடிவாசலை செப்டம்பரில் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ஷார்ட் டைமில் முடிப்பது போலவே வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம். அதோடு, இந்த வருடத்துக்குள் படமும் முடிந்துவிடும் என்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் படத்திற்கு செல்கிறார் வெற்றிமாறன். அதுபோல, சிவா இயக்கத்தில் நடிக்க திட்டம் வைத்திருக்கிறார் சூர்யா.
**- ஆதினி**
.�,