சிம்புவின் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, சமீபத்தில் சிம்புவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்து வரும் சிம்புவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிம்பு தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய நிலையில், அது தொடர்பான வீடியோ யூட்யூபில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவின் புதிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “ஒவ்வொரு பிறந்தநாளும் புதிய தொடக்கம். இந்த பிறந்தநாள் என் சகோதரர் சிம்புவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இந்த வீடியோவைப்பார்க்கும் போது சிம்புவில் இருக்கும் ஃப்ரெஷ்னெஸ்ஸும், ஃபையரும் என்னால் பார்க்கவும் உணரவும் முடிகிறது. என்னோட அப்துல் காலிக்கை உங்களிடம் அறிமுகம் செய்ய நான் பொறுமையின்றி காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிம்புவைக் குறித்து குறைகளும், குற்றங்களும் மட்டும் கூறப்பட்டு வந்த சூழலில், வெங்கட் பிரபுவின் புகழ்ச்சியும், சிம்புவின் மாற்றமும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”