படப்பிடிப்பில் சிம்புவின் ஒத்துழைப்பு குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும்போது, நடிகருடன் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் பிரபு தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
சென்ற வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், இந்தப் படத்தில் சிம்புவின் பாத்திரம் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் சிம்பு இந்தப் படத்தில் தோன்றியது வரவேற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்தப் படம் தாமதமாகியது. மேலும் சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாததும் ஒரு காரணம் என்று வதந்தி பரவியது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் சிம்புவுடன் பணிபுரிவது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், தனக்குச் சிறுவயதிலிருந்தே சிம்புவைத் தெரியும் என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான நபராகவும், குடும்பத்தில் ஒருவராகவும் சிம்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது சென்னை 28 படத்துக்கு சிம்புவின் பங்களிப்பைப் பற்றி பேசிய பிரபு, சிம்பு தான் ‘சரோஜா சாமான்னிக்காலோ’ என்ற ஹிட் பாடலை திரைப்படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் வைக்க பரிந்துரைத்ததாகத் தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்தார். மேலும், சென்னை 28 படத்தை மதுரை பகுதியில் விற்க சிம்பு உதவியதாகவும் வெங்கட் பிரபு கூறினார்.
சிம்புவுடன் நீண்ட காலமாகப் பணியாற்ற விரும்பினாலும், மாநாடு படத்தில்தான் இந்தத் திட்டம் கைகூடியது எனக் கூறினார் வெங்கட் பிரபு. சிம்புவுடனான படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்த அவர், சிம்பு பற்றி பலரும் வேறுவிதமான விஷயங்களைப் பேசினாலும், அவருடன் மாநாடு படப்பிடிப்பில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவிலும் சிம்பு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டார் என்று சிலர் என்னிடம் கூறினர். ஆனால், உண்மையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை ஹைதராபாத்தில் சிம்புவை வைத்து நான் படப்பிடிப்பை நடத்தினேன். சிம்பு பற்றி மற்றவர்களால் வெளியில் சொல்லப்படுவது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சரியான நேரத்தில் ஷூட்டிங் நடக்க முழு ஒத்துழைப்பை அளித்தார்” எனக் கூறினார்.
மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”