நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.
’விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.
வழக்கமான கெளதம் வாசுதேவ் படங்களாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என்பது படத்தின் போஸ்டர் பார்க்கும் போதே தெரிய வருகிறது. மேலும் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை வசனம் எழுதியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. நடிகர் சிலம்பரசன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும்படியான போஸ்டர் ஒன்றை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்து ‘படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு போய் இன்னும் பல புதிய விஷயங்களை கற்று கொள்வது போன்ற அனுபவமாக இந்த படம் எனக்கு உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த பிசினஸ் கொண்ட ஒரு நட்சத்திர நடிகருடன் மீண்டும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் டீம் அனைவரும் முத்துவின் இந்த பயணத்தில் உடன் இருந்ததற்கு நன்றி’ என்ற கேப்ஷனோடு படக்குழுவினரை குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார்.
படத்தில் இதற்கு முன்பு ‘முத்துவின் பயணம்’ என க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் .
**ஆதிரா**