‘என்னையும் அழைத்தார்கள்’: வெளிப்படுத்திய வரலட்சுமி

Published On:

| By Balaji

நடிகர் சரத்குமாரின் மகளாகவே இருந்தபோதும், திரைப்பட வாய்ப்புகளுக்காக தானும் படுக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த பகிரங்க புகாரை அவர் முன்வைத்துள்ளார். “சினிமாவிற்குள் நடிக்கவரும் பெண்கள் பல பிரச்னைகளை சந்தித்துவருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றனர். அதனைத் தவிர்த்தால் தனக்கான வாய்ப்பை இழப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்களே” என்று தொகுப்பாளர் கேட்டதற்கு வரலட்சுமி இவ்வாறு பதிலளித்தார்.

அவர் பேசும்போது, **“அவர்கள் அனைவரையும் பிரச்னையை வெளியே கொண்டு வர சொல்லுங்கள். எனக்கும் அதே பிரச்னை வந்தது. ஆனால் நான் அதனை வெளியே கொண்டு வந்தேன். உண்மை என்னவென்றால் இவ்வாறான அனைத்து சிக்கல்களையும் நானும் பெருமளவில் சந்தித்துள்ளேன். ஆனால் அதற்கு ‘நோ’ சொல்வதற்கு நான் கற்றிருந்தேன்.**

**சரத்குமாரின் மகளாக இருந்தபோதும், இத்தகைய பிரச்னை எனக்கும் நடந்தது. அதைப்பற்றிய தொலைப்பேசி அழைப்புகளின் பதிவும் என்னிடம் உள்ளது. ‘*இவர்கள் கட்டுப்பட்டு வரமாட்டார்கள். கதாநாயகனுடனும், தயாரிப்பாளருடனும் இருக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு வரமாட்டார்கள்*’ என்று என்னைப்பற்றி கூறியதன் ஆடியோ பதிவை நானே கேட்டுள்ளேன். ஆனால் அத்தகைய படம் எனக்குத் தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன்.**

**நான் நோ சொல்ல கற்றிருந்தேன். ஒரு பெண் எப்போது ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்கிறாளோ வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமாகும். ஆம், நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கும் வாய்ப்பு கிடைக்க அதிக தாமதமானது. அதற்கு நான் கஷ்டப்படவில்லை என்று பொருள் இல்லை. பலபேர் எனக்கு தடை விதித்திருந்தார்கள். நிறைய பேர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் நான் மிகச் சரியாக இருந்தேன். ஆனால் அது பரவாயில்லை.**

**ஏனென்றால் இன்று நான் எனது சொந்தக்காலில் நிற்கிறேன். 25 திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டேன். 25 நல்ல இயக்குநர்களுடனும், 25 நல்ல தயாரிப்பாளர்களுடனும் இணைந்து வேலை செய்ய என்னால் முடிந்தது. இப்போது நான் எனது 29-ஆவது திரைப்படத்தில் நடிக்கப்போகிறேன். நான் அதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். மீ டூ பிரச்னை குறித்து முதன்முதலில் வெளியில் பேசியதே நான் தான். பெண்களிடம் இத்தகைய அணுகுமுறை இருக்கும்போதே இல்லை என்று கூறிவிடுங்கள். முதலில் ஆமாம் என்று கூறிவிட்டு பின்னர் புகார் எழுப்புவது தேவையற்றது. நீங்கள் அவரது பெயரை வெளியில் கூறவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியில் வரப் பாருங்கள்.”** என்று அவர் கூறினார்.

மேலும், “நான் அவர்கள் கேட்டது போன்றெல்லாம் நடந்துகொண்டேன். ஆனாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உங்கள் பிரச்னை. ஏன் அவ்வாறு செய்தீர்கள். நான் எது வேண்டுமானாலும் செய்து வளர்வேன் என்று நீங்கள் கூறுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவ்வாறு செய்வதற்கும் அதிக தெம்பு தேவை. அதற்கு அதிக மன வலிமை உடையவராக இருக்கவேண்டும். அந்த பாதையை நீ தேர்வு செய்வது உங்கள் விருப்பம். இல்லையென்றால் சற்று அதிக முயற்சி செய்து என்னைப் போன்ற பாதையில் பயணிப்பதும் உங்கள் விருப்பம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தான் சந்தித்த பிரச்னை குறித்து தைரியமாக வெளிப்படுத்தியதற்கும், பெண்களுக்கு சிறந்த அறிவுரையை வழங்கியதற்கும் வரலட்சுமிக்கு பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share