சூர்யாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய வன்னியர் சங்கம்!

Published On:

| By Balaji

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மற்றும் இந்தியா முழுமையும் உள்ள திரையுலக பிரபலங்கள், சமூகநல ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்ற திரைப்படம் வன்னியர் சங்கம், பாட்டாளிமக்கள் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சூர்யா மன்னிப்பு கோர வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவைதான். இதை தொடர்ந்து அந்த காட்சி படத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share