6பெரிய இடத்து விஷயம்!

Published On:

| By Balaji

வனமெல்லாம் செண்பகப்பூ – 16 ஆத்மார்த்தி

பாடல் எதையாவது கற்பிக்குமா..? சமூகத்தோடு இசைவழியே உரையாடுவது பாடலின் கடமை அல்ல; அது பாடல் என்கிற வடிவம் சமூகத்துக்குத் தர விழையும் கொடை. சினிமா சிச்சுவேஷன் அதாவது திரைப்படச் சூழல் தேவை என்பதைத் தாண்டி ஒவ்வொரு பாடலும் கேட்பவர்களின் மனத்தில் நிகழ்த்துகிற சின்னதொரு சலனம்கூட அறிதல் பரப்பில் எதிர்பாராமையின் மீதும் புதிர்த் தன்மையின் மீதும் நிகழ்த்தப்படுகிற அர்த்தபூர்வ ஊடாட்டம்தான். ஆக, மாற்றம் என்பது நியதி. எது மாறும் என்பது விந்தை. கலை ஒரு பரிசைப்போலவே சமூகத்தின் பண்பாட்டு நம்பகம் மீதான தன் மாற்றங்களை நிகழ்த்தித் தருகிறது.

காலம் ஒரு கதைசொல்லி. தன் கதையை விட்டுக்கொடுக்கிற பாவனையில் அது மனிதர்களின் கதைகளைச் சேகரிக்கிற பாவனையில் அவற்றைத் தொகுத்துத் தன் மாபெரிய கதையை எழுதிப் பார்த்து விடுகிறது. காலமும் மொழியும் சங்கமிக்கிற புள்ளிகளில் ஒன்றுதான் பாடல்கள். இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி. இவரது காலம் (1920-1989) தன் மனமகிழ்ந்து மருதகாசி எழுதிய பல நூறு பாடல்களில் இந்தப் பாடல் இன்றைக்கும் என்றைக்குமான படிப்பினையாகவே நம்முன் விரிகிறது. இந்தப் பாடலின் பொதுத் தன்மையும் நேரடியான புத்தம்புதுமையும் இன்னும் உலர்ந்து விடாத இதன் மொழி ஈரமும் மிகவும் முக்கியமான பாடலொன்றாகவே இதை நம்முன் நிறுத்துகிறது. மருதகாசியின் வித்தகம் செப்பும் நற்பாடல் சாரங்கதாரா, 1958ஆம் ஆண்டு வெளியான படத்தில் இடம்பெற்றது. இதற்கான இசையை வடித்தவர் ஜி.ராமநாதன். இதைப் பாடியவர்கள் எஸ்.சி.கிருஷ்ணன் மற்றும் ஏ.பி.கோமளா.

**சாரங்கதாரா**

பெரிய இடத்து விஷயம் அப்படி இருக்கு

பேசத் தேவையில்லா விஷயம் அது நமக்கு

சொல்லியும் சொல்லாமலும் தள்ளிச்செல்கிற அப்பாவித்தனத்தை முதலிரு வரிகள் எடுத்துக்காட்டுகின்றன இல்லையா..? எதையெல்லாம் பேசக் கூடாது என்பதன் முக்கிய சூத்திரமாகப் பெரிய இடம் என்கிற பதத்தைப் பகடி தாண்டிய பக்குவமாகக் கொள்வது சாலச்சிறந்ததன்றோ

பெரிய…

திரைமறைவில் எத்தனையோ நடக்குது – அதைத்

தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது

அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது – அதனால்

ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது

எது தெரியவந்தாலும் அதை எப்படிச் சொல்ல வேண்டும் அல்லது யாரிடம் பகிர வேண்டும் என்பதல்லவா முக்கியம். இல்லாமற் போகையில் அரைகுறைகள் ஆபத்தில் மாட்டத்தானே செய்யும்..?

பெரிய…

மாட்டைக்காட்டி ஆட்டை அவங்க விப்பாங்க – பிடி

மண்ணைக்காட்டி பொன்னுயின்னு சொல்வாங்க

கோட்டானோடு குயிலை சேர்த்து வைப்பாங்க – அவங்க

கொள்கையில் விடாப்பிடியா நிப்பாங்க

பெரிய…

இங்கே இன்னும் மெல்லத் திரை விலகுகிறது. இப்படி எல்லாம் நிகழ்த்தினாலும் அவை பெரிய இடம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் நீ பட்டும்படாமல் பேசு அல்லது பேசாமல் விட்டுவிடு என்பதன் பின்னே உள்ள யதார்த்தம் முக்கியமானது.

வால்பிடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்

வாய் திறக்கு முன்னே தாளம் போடும் – எதுக்கும்

கால் பிடிக்கும் பல்லைக்காட்டி பொழைக்கும் – அதைக்

காணும்போது கழுதை கூட சிரிக்கும்… ஆமா

பெரிய…

இன்றைக்கும் பொருந்தி வருகிற காட்சிப்படிமங்களின் தொகுப்பாய் இந்தப் பாடல் விளங்குவதுதான் இதன் சிறப்பாகவும் விளங்குகிறது.

**காணொலிகளும் கண்மறைந்து பெருகித் ததும்புகிற கேமராக்களும் செல்வாக்குடன் திகழ்கிற ஊடக முக்கியத்துவம் வாய்ந்த தற்காலத்தின் மேனியில் ஒரு பதியன் சித்திரத்தைப் போலத் தன்னை இந்தப் பாடலால் எழுதிக்கொள்ள முடிவதன் விந்தை மருதகாசி என்னும் மொழியாளுமையின் மாபெருந்திறமை என்றால் பொருந்தும். இந்தப் பாடலின் எந்த ஒரு வரியையும் வெறும் பாடலாக அல்ல; பொதுவில் இயங்குவதற்கான பாடக் குறிப்பாகவே அடுத்த தலைமுறைக்குச் செப்பித் தரலாம்**. இந்தப் பாடலின் உபகாதைகள் விரிந்தவண்ணம் செல்வது காலம் மாறினாலும் இந்த ப்பாடலின் சாரம் மாறாது என்பதை நிறுவுகின்றன அல்லவா?

சாரங்கதாரா என்றாலே மக்கள் அபிமானம் மிகுந்து நினைவிலாடும் இன்னொரு பாடல் [‘வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும்’](https://www.youtube.com/watch?v=_fIUqvQ8TV8)எனத் தொடங்கும் பாடல். தியாகராஜ பாகவதர் கோலோச்சிய காலத்தில் அவருடைய தீவிர அபிமானியாகத் தன்னை உணர்ந்த டி.எம்.சவுந்தரராஜன் பிற்காலத்தில் பெரும் புகழை அடைந்து பாடகர் திலகமாகவே மாறினாலும் அவ்வப்போது தன் கையெழுத்தில் பாகவதரின் பெயரை எழுதிப் பார்த்தாற்போல் அவருடைய பாணி, சாயல் தன்மை, தொனி விதம் இவற்றையெல்லாம் பிரதிபலிக்கிற சில பாடல்களைப் பாடினார். கேட்பவர்களுக்குப் பேரின்பமாக மாறிய அந்தப் பாடல்களில் பலவும் இன்றளவும் காலம் கடந்து மேலெழுந்து ஒலித்து வருகின்றன.

வசந்த முல்லை

வசந்த அசைந்து எனத் தொடங்குவதாகட்டும் பாடலின் நடுவெல்லாம் சிந்தனை விருந்து விந்தைகள் புரிந்து மந்திரக் கண், தந்திர வலை, சுந்தர வடிவு, இந்திர வில், சந்திர ஒளி சொற்களை வைத்துச் சீட்டாட்டம் ஆடுது எல்லாருக்கும் வாய்த்திடாது. மருதகாசி இசை மெட்டுக்கு எழுதிய பாடல்கள் பலவும் இசைத்தன்மை குன்றாமல் மறைந்தும் கலந்தும் இசையோடு இயைந்தபடி நகர்ந்தன. வசந்த முல்லை பாடல் காலம் கடந்து மருதகாசியின் புகழ் ஓதும் என்றால் அது மிகையன்று.

**மருதகாசியின் புகழ்பெற்ற பாடல்கள்**

நீலவண்ணக் கண்ணா வாடா – மங்கையர் திலகம் படத்தில் ராவு பால சரஸ்வதி பாடிய அற்புதமான பாடல். இதை எழுதியவர் மருதகாசி.

‘பிள்ளையில்லாக் கலியும் தீர வள்ளல் உந்தன் வடிவில் வந்தாய் எல்லையில்லா கருணை தன்னை என்னவென்று சொல்வேன் அப்பா என்னவென்று சொல்வேன் அப்பா’ என்ற வரிகள் பிள்ளைக்கனி அமுதத்தின் ஒப்பிலா அரும்பெருமையை இதைவிட அழகுற எந்த மொழியிலாவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது. அநேகமாக இதுவே உச்சம் என்பது வெறும் நம்பகம் அல்ல. நல்வைரத்துக்கு அதன் அபூர்வமே சாட்சியம் சொல்லும். இதேபோல தான் சின்னப் பாப்பா.

**‘சித்தாடைக் கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்’ பாடல் மருதகாசியின் பன்முகத் திறமைக்குக் கட்டியம்கூறும் இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டு.** அந்தக் காலத்தில் வகைமை என்பதற்காக மிகவும் கடினமாக முயன்றது திரையுலகம். பாடல்கள் சிச்சுவேஷன்களுக்கு நியாயம் செய்வதில் நூறு சதவிகித ஈடுபாட்டுடன் உருப்பெற்றன. குழு நடனப் பாடல்கள் வேகமான தாளக் கட்டுடன் விரைந்தோடுகிற ஒளி நதியெனவே மின்னிப் பூக்கத் தலைப்பட்டன. அப்படியான பாடல்கள் படத்துக்கான விளம்பரமாகவும் அமைந்தன என்பது அவற்றின் தேவையை அதிகரித்தது. வண்ணக்கிளி படத்தில் மருதகாசி எழுதிய இந்தப் பாடல் இசையரசர் கே.வி.மகாதேவன் இசையில் அந்தச் சூழலுக்குத் தக்க நியாயம் செய்ததோடு காலம் கடந்து இன்றளவும் பலராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் தொடங்குவதிலிருந்து நிறைவது வரைக்கும் 1:1 என்ற சரிவிகிதப் பகிர்மானத்திலிருந்து விலகி 1.25:0.75 என்ற விகிதத்தில் முதல் வரி சற்று விரைந்தொலிப்பதாகவும் அடுத்தது அதற்கேற்ப தன்னை ஈடுகட்டிக்கொண்டு நெடிந்தொலிப்பதாகவும் அமைந்திருந்தது ரசிக்கச் செய்தது.

**மறக்க முடியாத பாடல்**

ரம்பையின் காதல் படத்தில் இடம்பெற்ற ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வினில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடல் மருதகாசிக்கு மிகுந்த பெருமையைப் பெற்றுத் தந்தது.

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

காதல் கண்கள் உறங்கிடுமா

ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்

கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

பல்லவியிலேயே கேட்பவர் சிந்தையை முழுவதுமாகக் கவர்ந்து தன்வசம் பிடித்துக்கொள்வது மருதகாசியின் பாடல்கள் அநேகமும் செய்து பார்த்த தனித்துவம். ஒரு சிறு கேள்வியுடன் பல்லவியை முடிக்கிற இடம் கொள்ளை அழகு. கேட்கும் யாவருக்கும் ‘கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா’ என்ற கேள்விக்கான விடையாக ஒருமுகம் கொண்டு உறங்காது எனும் உணர்வை நேர்த்துவது கவிச்சிறப்பு

‘ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்’ என்பது காதலின் கையறு நிலைமையை சாமான்யர்களுக்கு ஏதுவான மொழியில் எடுத்துரைக்கிறது தானே..? மருதகாசியின் பாடல்கள் நேரடித் தன்மை மிகுந்து ஒளிர்பவை. மொழியின் அயரடிக்கிற சொற்களாய்த் தேர்வு செய்து தன் பாடல்களை அமைத்துக்கொண்டவர்களுக்கு மத்தியில் மருதகாசி இயல்பான வழக்காடல்களிலிருந்து வினவுதல்களிலிருந்தும் அன்பின் எளிய சொற்களைப் பிரதானப்படுத்துவதன் வாயிலாகக் காதலின் பேரன்பை மீண்டும் மீண்டும் எழுத விழைந்தார். அதில் வெற்றியும் கண்டார்.

எளிய வரிகளைப் போலத் தோன்றினாலும் ஒரு காலகட்டத்தின் காதலை கலாச்சாரத்தைப் பிரதிபலித்த வரிகளை எழுதியவர் மருதகாசி. மேலும், திரைப்பாடல்களின் போக்கு வெகுஜன ரசனையை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த மறுமலர்தல் காலத்தில் அவரது பாடல்கள் பலவும் மக்களுக்கு அணுக்கமாகத் திகழ்ந்தன. ‘சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு அங்கே’ என்ற பாடல் மருதகாசியின் எளிய புதிய வரிகளின் நேரடித் தன்மையைப் பறைசாற்றுவதற்கான சிறந்த உதாரணம். வண்ணக்கிளி படத்தில் ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’ என்ற பாடலும் இனிமையின் ஊற்றுதான். பார்த்திபன் கனவு படத்தில் ‘கண்ணாலே நாம் கண்ட கணமே’ என்ற பாடல் பாரம்பரிய இசையின் விள்ளலாகவும் புத்தம் புதிய சொல் திசையைக் குரல்கள் வழி நேர்த்திய பாடலாகவும் அமைந்தது. கிராமியத் தமிழில், `ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே’ என்ற பாடல் மருதகாசியின் இன்னுமொரு சிந்தனை தேன் துளி.

மருதகாசி எளிமையான கவி. சொல்ல வந்ததைத் துல்லியம் குன்றாமல் சொல்லிச் சென்ற மேதை. தமிழ்த் திரையிசையின் ஆரம்ப காலத்தைத் தாங்கி நிற்கிற தூண் போலத் தன் பெயருக்கு உண்டான புகழைச் சேகரம் செய்தவர். இன்றளவும் மறக்கவியலாமல் உச்சாடனம் செய்யப்படுகிற மருதகாசியின் பாடல்களே அவரது அமரத்துவத்தைப் பறைசாற்றுகிற புகழ்முத்துகள்.

வாழ்க பாடல்கள்!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

[ஒன்றின் பெயர் மூன்று!](https://minnambalam.com/entertainment/2020/08/11/7/vanamellan-senbagapoo-music-series)

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share