7இணையில்லா கண்ணதாசன்

Published On:

| By Balaji

வனமெல்லாம் செண்பகப்பூ-17 – ஆத்மார்த்தி

கண்ணதாசன் பாடல்கள் எழுதிய காலம் தமிழ்த் திரைப்பாடல்களின் சரித்திரத்தில் முதன்மையாக ஓங்கி ஒளிரும் காலமாக அமைவது தற்செயலல்ல. தமிழ்ப் பாடல்களை முந்தைய பல கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை செய்த மகாகவி கண்ணதாசன். தத்துவச் செறிவையும் இலக்கியச் சாரத்தையும் வழங்கப்பட்ட சூழல்களின் நான்கு மால்களுக்கு உட்பட்டு மெட்டுக்குப் பாட்டெழுதுகையில் துளியும் பிசகாமல் பாடலாக்குகிற வல்லமை அவரிடம் இருந்தது. அவரது வருகைக்கு முன் வரைக்கும் இசையின் பிடிக்குள் முன் தீர்மான நிழலுக்கேற்ப பாடல் தன் உடலைக் குறுக்கி நீட்டி பருத்துக் குன்றி சகலமும் இசை என்பதன் இறுகப் பற்றிய கரங்களிலிருந்து வழுவாமல் இருக்க வேண்டியிருந்தது.

**பூனைக்கு மணி கட்டுவது என்பார்கள். இது யானைகளுக்கு வகுப்பறை கட்டிப் பயிற்றுவிப்பதை விடக் கடினமானது. ஆனாலும் அது கண்ணதாசனால் எளிதில் நிகழ்ந்தது.** தமிழ்ப் பாடலின் போக்கை முற்றிலுமாக மாற்றினார் கண்ணதாசன். இசைக்கு எதிர்த் திசையில் செல்லாமலேயே தனக்கு வேண்டிய திசைத் திருப்பத்தைப் பாடல்களால் செய்துகொள்ள முடிந்ததற்கான ஒரே காரணகர்த்தாவாக கவியரசர் விளங்கினார். மெட்டுக்கள் அவர்முன் கைகட்டின. பாடல்களுக்கு என விதிக்கப்பட்டிருந்த எல்லா ஷரத்துகளையும் ரத்து செய்த கண்ணதாசன் தளையற்ற புதிய பாணிகள் பலவற்றை இசை கேடேதும் ஏற்படாவண்ணம் பாடலாக்கினார். அவர் தொட்ட அனைத்துப் புத்தம் புதிய முயற்சிகளிலும் அவர் வெற்றி பெற்றார் என்பது மாத்திரம் செய்தி அல்ல. அவரால் விடுவிக்கப்பட்ட தமிழ்த் திரைப்பாடலின் இயங்குதளம் பன்மடங்கு விரிவடைந்தது. அதற்கான முகாந்திரங்களை வலுவாக்கித் தந்ததும் கண்ணதாசன் செய்து காட்டிய அற்புதங்களில் ஒன்றே.

நிர்பந்திக்கப்பட்ட கருத்துக் குறுக்கங்களை ஒருபோதும் லட்சியம் செய்தவரில்லை. மாறாகப் புதிய கருத்தாக்கங்களைப் புத்தம் புதிய அதுவரை புழக்கத்திலில்லாத சொல் முறைகளை வார்த்தைக் கூட்டுகளைக் கருத்துச் செறிவை தத்துவ சாரத்தை என கண்ணதாசன் பாடல் என்கிற வழமையான வடிவத்துக்குள் அதுவரை இயலாத மாபெரிய மொழியாடல்களை முயன்று பார்த்தார். அத்தகைய பாடல்களைத் தனியே படத்தினின்றும் நகர்த்திச்சென்று ஒவ்வொரு வரியாக உடைத்தாலோ, கலைத்தாலோ திரைப்பாடல் என்பதனைத் தாண்டிய வேறொன்றாக மிளிர்வதையும் அத்தகைய வரிகளின் நீட்சி எல்லையற்றதாக விரிவதையும் மீண்டும் மீண்டும் சிந்தனையின் சகல திக்குகளிலும் சுழன்றுகொண்டே புதிய அர்த்தங்களை மறைபொருள் விளக்கங்களை மெய்ப்பாடுகளை அறிந்தபடி சீட்டுகளைக் கலைத்துப் புதிய ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிற அதே சித்து வேலையைச் செய்து பார்ப்பதையும் உணர்கையில் பிரமிப்பு உண்டாகிறது.

[ஆசை போவது விண்ணிலே](https://www.youtube.com/watch?v=n4jXwPHLMBc)

நாம் பிறந்த மண் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் கவியரசு எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாடல், ஒரு மாமலைக் குறிஞ்சி தேன் கலந்தொழுகும் புதுமழை யாராலும் மீட்டெடுத்துத் தர முடியாத ஒற்றை, பேரன்பு மனிதன் கசங்கிய தன் மனத்தோடு உரையாடுகையில் அது தத்துவமாகிறது, ஞானம் எதிர்பாராத அதிதி போல் வந்துதிப்பது. கொள்ளுவதும் தள்ளுவதும் அவரவர் பலாபலன் பொறுத்த ஒரே நிகழ்வின் இருவேறு திருப்புதல்கள் அவ்வளவே. இந்தப் பாடலைப் பாருங்கள் மெல்லிய தன் மயக்கப் பாணிப் பாடல். அயர்ந்து லேசாய்க் கிறங்கடிக்கிற மைய இசைக்கோவை அதன் நகர்தலின் இறுதியில் விட்டேற்றியான அதே நேரம் கலக்கமும் வெறுப்பும் கலந்து குழைந்த புதிய உறுதியான குரலில் பாடலை நகர்த்துகிறார் எஸ்.பி.பி.

ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

தொடங்கும் இடத்திலேயே மண்ணிலே என்பதை பாலு எனும் பாடலசுரன் பாடுவது மொத்தமாய்க் குத்தகை செய்கிறது கேட்போர் மனங்களை.

ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

பாலம் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

பாலம் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

லேசாய் இங்கே வளைகிறது இசை நதி மெல்லிய மயக்கத்தை உண்டாக்குகிறது.

இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்

**இதில் சொர்க்கங்கள் என்ற சொல்லை பாலு பாடும் அழகு இன்னும் மிளிர்வது ஒன்றான வர்க்கங்கள் என்ற அடுத்த வரியை சற்றே நீட்டுவதில் கூடுகிறதல்லவா சொல்ல வந்ததைத் துன்பத்தின் இறுக்கத்தோடு பாடுவது பெருஞ்சிரமம். ஏறி இறங்கி ஊசலாடுகிற மனோபாவத்தைக் குரல்வழி பிரதிபலிப்பதன் கடினம் அது**

இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்

இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்

இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்

சட்டம் இல்லாத சங்கங்கள்

தர்மம் தாளாத தங்கங்கள்

கட்டடம் ஜொலிக்கிறது

அஸ்திவாரம் அழுகிறது

வாழ வந்த வாழ்க்கை கட்டடமாகிறது வாழ்பவன் மனம் அஸ்திவாரமாகி அழுகிறது. மேலோட்டமாய்க் கடக்கவே இயலாத மாபெரிய வரிகள் இவையல்லவா…

ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

இடையிசை பலமாகவும் தேய்ந்தும் பலம் மிகுந்தும் மறுபடி தேய்ந்தும் நிதர்சனத்தின் குறுக்குவழிகளையும் நனைத்தபடி ஓடுவது வசீகரமாகிறது. இந்தப் பாடலின் மாபெரிய பலம் பாடிய குரலோடு எந்த விதத்திலும் குறுக்கீடாக வராமல் ஒத்திசையும் இடையிசைக் கோவைகள்தான்.

யாரும் சிந்தட்டும் கண்ணீரை

நீங்கள் தெளியுங்கள் பன்னீரை

யாரும் சிந்தட்டும் கண்ணீரை

நீங்கள் தெளியுங்கள் பன்னீரை

இருட்டில் எப்போதும் இன்பங்கள்

வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்

இருளும் ஒளியும் வழமையான அவற்றின் கூறல் முறையினின்றும் முற்றிலுமாக மாற்றி வேறொன்றாவதைக் கவனியுங்கள். இருள் நல்லது ஒளி தீயது என்பதை நிறுவுவதும் கலைப்பதுமான இதன் தொடர்ச்சி இன்னும் ரசம்.

இன்பங்கள் தூங்குவதில்லை

துன்பங்களும் அப்படித்தான்

பத்து பதினொன்னு பன்னிரண்டு

சொத்து பலகோடி நமக்குண்டு

பற்று வையுங்கள் இப்போது

பாவம் சந்திப்பது எப்போது

இந்தப் பாடலில் பத்து, பதினொன்று, பன்னிரண்டு என்ற வார்த்தைகள் வெறும் எண்களா அல்லது வெறும் சொற்களா அதற்குப் பதிலாக வேறேதும் வந்திருக்கலாமோ என்றெல்லாம் சிந்தித்தால் அதன் சாதாரணமே. அதனதன் அபூர்வமாக மாற்றம் பெறுகிற மாயவித்தை புரிபடும். கண்ணதாசனின் பெரும் பலம் அவரது வழங்கல் முறை. ஏன் எனக் கேட்பதற்குக் கேள்விகள் எஞ்சாத வண்ணம் பேரொளி வீசும் அவரது புதிய முயல்வுகள் தனியாவர்த்தனம் செய்வதிலும் சமர்த்தானவை எனச் சொல்லவும் வேண்டுமா?

பற்று வையுங்கள் இப்போது பாவம் சந்திப்பதெப்போது. இந்த பாவம் சந்திப்பது என்பது பாவம்… சந்திப்பது என்றால் அது ஒரு பொருள் பாவத்தைச் சந்திப்பது என்றால் இன்னொரு நீட்சி. இந்த இரட்டைத் தன்மையை ஒரு பழகிய வில்லாளனின் குறி தவறாத அம்பு கனியைப் பிளக்கிறாற் போலவே எங்கும் எதிலும் இரண்டாய்ப் பிளக்கும் வண்ணம் பயன்படுத்திச் செல்கிறார் கவியரசர்

உழுதவர்கள் வாடுகிறார்கள்

அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்

பாடல் முழுவதுமே ஆங்காங்கே வசனத்தின் அருகமைகிற தொனியில் பேசிக் கடப்பது பாடலின் அடித்தளமாகிறது. சொல்ல வந்ததன் தீர்க்கம் குன்றாமல் அதே நேரம் கேட்கும் அனுபவத்தை அதிகரித்து வைக்கிறது.

ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

பாலங்கள் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்

மண்ணில் பலபேரை மன்னிக்கும்

தெய்வம் சிலநேரம் சிந்திக்கும்

மண்ணில் பலபேரை மன்னிக்கும்

**இந்த இரண்டு வரிகளுக்கு இடையிலான முரண் இதன் நீட்சி. சில நேரம் சிந்தித்தால் மட்டுமே தெய்வம் மண்ணில் பல பேரை மன்னிக்கும் என அர்த்தம் கொள்வது ஒருபுறம். தெய்வம் சில நேரம்தான் சிந்திக்கும் மற்ற பொழுதுகளில் பல பேரை மன்னிக்கும் என்றால் முன் சொன்னதன் எதிராடல் அல்லவா. இன்னும் ஒன்றை முயலலாம்.** தெய்வம் சிந்திக்கிற சில நேரம் தவிர்த்து அது வேறென்ன செய்யுமெனத் தெரியாது. அப்படியான நேரத்தில்கூட அது பல பேரை மன்னிக்கும் என்றால் முன் சொன்னதன் நீர்த்த வேறோர் அர்த்தமாகிறது.

இந்த மன்றத்தில் ஆடுங்கள்

அந்த மன்னிப்பை கோருங்கள்

இந்த மன்றம் அந்த மன்னிப்பை வழங்கவேண்டுமானால் ஆடியபடியே மன்னிப்பைக் கோருங்கள் என்று கேளிக்கையினூடான பிரார்த்தனை முறை ஒன்றைப் பலருக்கும் பகிர்ந்து தருகிற ஆன்மவிசாரமாக ஒரு தனியனது மனவலியைப் படர்த்தித் தருகிற மகானுபவம் இந்தப் பாடல்.

இறைவாஆஆஆஆ… என்னை மன்னித்துவிடு

மற்றவர்கள் எப்படியோ நான் மட்டுமாவது எனக்கான கணக்கைத் தீர்த்துக் கொள்கிறேன் என்று அந்த மன்னிப்பைக் கோருகிறான் நாயகன். பாடல் அதனளவில் நிறைந்து கேட்பவர் மனங்களில் தன் மறு சுழற்சியைத் தொடங்குகிறது. எல்லோருக்கும் வாய்க்குமா அந்த மன்றம்… எப்போதும் உணர்ந்து கோருவரா… அப்படியானதொரு மன்னிப்பை அப்படிக் கோரினால் அது தெய்வம் சிந்திக்கிற சிறுபொழுதினூடே அடங்குமா? அப்படி அடங்கினால் அவர்களும் மன்னிக்கப்படுவாரா… இதென்ன கட்டாயமா… இதற்கு மாற்றேதும் உண்டா… அப்படி இல்லாமற் போகுமெனில் இதனை வலுவாக நிர்பந்திக்காமல் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிற இதன் தொனியின் பின்னுறையும் அர்த்தப்பாடு என்ன எனச் சிந்தித்தால் வருகிற விடை அழகான ஒன்றாக எஞ்சுகிறது. அது ஞானமென்பது பெருமழை பகிர்தல் அன்று அது தூறல்கால நனைதல். யாருக்குக் கொடுப்பினையோ அவர்களுக்கு மட்டுமே வாய்க்கும்.

வாழ்க பாடல்கள்… மகாகவி கண்ணதாசன்!

வாழ்க பாடல்கள்!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

[பெரிய இடத்து விஷயம்!](https://minnambalam.com/k/2019/09/29/10)

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share