;அன்பெனும் பெருஞ்சொல்!

Published On:

| By Balaji

வனமெல்லாம் செண்பகப்பூ – 23 -ஆத்மார்த்தி

எந்தப் பேழையில் எந்தப் பாடலோ என்று யாரால் அறுதியிட முடியும். சினிமா என்பதன் கட்டுமானம் விசித்திரமானது. இயல்பு போலத் தெரியவேண்டிய எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து கேட்டு வாங்கிப் பெற்று கோத்து அதனைத் திருத்தி செப்பனிட்டு முடிவாக எத்தனைக்கெத்தனை பொய்யின் திசையில் பயணிக்க முடியுமோ, அத்தனையும் பயணித்து நிகர்நிஜம் செய்கிற மகாகலை. கொஞ்சம் பிசகினாலும் ‘நல்லால்லை’ என்ற ஒற்றைச்சொல்லில் காலி செய்துவிட்டு அடுத்ததை நோக்கச் சென்று விடுவான் ரசிகமாமணி. இத்தனை இடர்களையும் எண்ணிப் பயந்தபடியே முயல்வதும் முனைவதுமான கலைதான் சினிமா. இதில் பாடல்களுக்கு எப்போதும் டபுள் ஆக்ஷன் வேறு. படம் வருவதற்கு முன்பாகவே வெளியாகி முதல்கட்ட கவனத்தை கவர்ந்தாக வேண்டும். பிறகு, படத்தோடு சேர்த்துப் பார்க்கையில் இன்னும் ஆர்வத்தைப் பூர்த்தி செய்தாக வேண்டும். பாடல் என்பது நுட்பமான பொறுப்பு. அத்தனை எளிதாகக் கடந்து விடவே முடியாது.

கதையைத் தயாரிக்கையிலேயே இங்கே இங்ஙனம் பாடல் ஒன்று, பாடல் ரெண்டு என மார்க் செய்து கொண்டு, அதிலிருந்தே என்ன சூழலில், என்ன கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழவேண்டியது, என்ன மனோநிலையில் என்ன அறிதல் புரிதலில் பாடல் நிகழ்த்தப் படவேண்டியது என்பது வரைக்கும், பாடல் என்பது தீபாவளி பண்டிகையின்போது ஸ்வீட் செய்கிறார் போலத்தான், அது தனிப் பண்டிகையாகும். பார்த்துப் பார்த்து மின்னி மிளிர்ந்தால்தான் அதற்குண்டான சிறப்பு கிடைக்கும். ஒவ்வொரு வார்த்தையும் வேதச் சொல்லாடலுக்கு நிகராகப் பார்த்துப் பார்த்துப் புனைய வேண்டிய சாகசம். பாடல் நன்றாக அமைவதென்பது உண்மையாகவே படத்தின் வெற்றி தொடங்குகிற இடம்தான்.

பாடலை எழுதுவது யார், பாட வேண்டியது யார், இசையின் தன்மை என்ன, இசைக்கருவிகள் எவ்வண்ணம் இதனுள் பிரயோகிக்கப்பட வேண்டும், என்ன மாதிரியான உணர்வு இழைதலைக் கொண்டு நகர்த்தப்பட வேண்டும், இடையொலிகளும் உடனொலிகளும் எப்படியானவையாக இடம் பெறலாம், தொடக்க இசை எத்தகையது, இடையிசை எப்படிப் பல்லவியைச் சரணத்தோடு இணைக்கலாம், சரணங்கள் தங்களுக்குள் எப்படி கோர்க்கப்பட வேண்டும், பாடலின் முடிவிசை எந்தவிதமாக நிறைந்தேறுவது என ஒரு பாடலைப் பகுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் பல உபவிள்ளல்கள் இருப்பதை உணர முடியும்.

எல்லோரும் பாடலை எண்ணத்திலிருந்து சாத்தியம் செய்து அழகாக எடுத்து வெற்றிகரமாகப் படமாக்கி எல்லா விதத்திலும் சிறந்துவிடத் தான் எண்ணுகிறார்கள். ஆயிரம் தருக்கள் சூழ்ந்திருந்தாலும் ஒரே ஒருமுறை கனிகிற அற்புத நெல்லி போலவே வனமெல்லாம் விதவிதப் பூக்கள் சூழ்ந்திருக்கையில் ஒரே ஒருமுறை மட்டும் மலர்கிற தேவமலர் போலவே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது ஒவ்வொரு நிரந்தர நற்பாடலும்.

**இளையராஜா என்ற ஆலமரத்தின் நிழல்**

கங்கை அமரன் இயக்குநராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக, கதாசிரியராக, பாடகராக பன்முகத் திறனோடு மிளிர்ந்த மாமணி. அவரது இசையமைப்பில் பல பாடல்கள் காலம் கடந்து ஒலிப்பவை. ஒரு பாடலின் எல்லாவற்றையும் உருவாக்கத் தெரிந்ததனால் தானோ கங்கை அமரன் எழுதினாலும் படமெடுத்தாலும் இசைத்தாலும் பாடினாலும் எல்லாவற்றிலுமே சிறக்க முடிந்திருக்கிறது. இளையராஜா என்ற ஆலமரத்தின் நிழலிலேயே தோற்றம் கொண்டாற்போலத் தெரிந்தாலும்கூட கங்கை அமரன் அஷ்டாவதானி. பன்முக வித்தகர். அவரது எழுத்தும் சரி, குரலும் இசையும் சரி… சினிமாவின் தேவைக்கேற்ப கச்சிதமாய் இயங்கத் தலைப்பட்டவை. பாடலின் அளவுகளாகட்டும் ஆன்மாவாகட்டும் இரண்டையும் நிரடி நிகர்த்த நல்லதொரு படைப்பாளி கங்கை அமரன்.

ஜெயச்சந்திரனின் மாறாத பொன் குரலுக்குப் பல பாடல்களை உதாரணம் சொல்லலாம். காலம் ஜெயச்சந்திரனுக்கு முன் கைகட்டி ஒரு சேவகனைப் போல நிற்கிறது. எல்லோருக்கும் அப்படியான ஒரு நல்வரம் கிட்டியதில்லை. ஜெயச்சந்திரன் பாடிய பாடலின் இசைக்கோவைகள் தொடங்கி புறத்தகவல்களைக் கொண்டு மட்டுமே நம்மால் அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் தரவுகளினூடாக அது வெளியான காலத்தைக் கணிக்க முடியுமே தவிர, அவரது குரலைக் கொண்டு எந்த வருடம் வந்திருக்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. அந்த அளவுக்கு அத்தனை உற்சாகமான புத்தம் புதிய தன்மையைக் குன்றாமல் குரல்வசம் வைத்திருக்கிற மந்திரநாயகன் ஜெயச்சந்திரன்.

வாலி எதை எடுத்து எழுதினாலும் அந்தக் கதைக்கு நியாயம் செப்பத் தெரிந்த பெருங்கவிஞன். எந்தப் படம் யார் நாயகன் என்பதெல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் வெறும் தகவல்கள் மட்டுமே. ஒவ்வொரு சொல்லாய்ப் பெற்றுப் பாடலாக்கிப் பெரும்பேறடைவதெல்லாம் வாலியின் இடத்தில் தேவையே இல்லாதவை. அவரளவில் கதை அவரை உலுக்க வேண்டும். கதை அவரிடம் பேசினால் அவர் இசையோடு பேசுவார். தன் மனத்தை அகழ்ந்து வரிகளைத் தருவார். உண்மையில் வாலிக்கு அப்பால் அவர் அளவுக்கு பாடலைக் கச்சிதமாகக் கதையின் தேவைக்கேற்ப எழுதிய இன்னொரு கவிஞரைச் சுட்டுவது இயலாத காரியம்.

கலைப்புலி சேகரன் நிறையப் படங்களை எடுத்தவரில்லை. அவர் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், அதன் காமெடி காட்சிகளுக்காக இன்றளவும் புகழப்படுகிற தமிழ் நகைச்சுவைப் படம். நகைச்சுவைப் படங்களின் உலகளாவிய கதை சொல்லல் முறையின் தாத்பர்யத்தின்படி நெடிய நகைச்சுவைக் கதையின் பின்புலத்தில் சின்னஞ்சிறிய சோகம் உறைந்திருத்தல் சிறப்பு. சர்வதேச அளவில் உதாரணங்கள் உண்டு. தமிழில் பலே பாண்டியாவை எடுத்துக்கொண்டால் தற்கொலை செய்வதற்காகக் கிளம்பிச் செல்லும் ஒரு சிவாஜியின் கதையாகத் தொடங்கிப் படமெல்லாம் நகைச்சுவை மிளிர்ந்தாலும் அதனூடாக சிவாஜியைத் தன் சொந்த அண்ணனாகவே எண்ணும் ஒரு பெண், அவரைத் தன் மகனாகவே வரித்து தங்கையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லியபடி உயிரை விடும் அவளது தந்தை என சின்னதொரு இழை படத்தின் ஆழந்தாங்கியாக மறைந்திருக்கும்.

அவ்வண்ணமே ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் படத்தில் எல்லோரையும் ஏமாற்றும் பாண்டியனின் (பாண்டியராஜனின்) பின் கதையில் அவருக்கு ஒரே ஒரு தங்கை. அவளைக் கைக்குழந்தையாக பாண்டியனின் வசம் ஒப்படைத்து விட்டு இறந்துபோவார் அவன் அம்மா. சிறு பிள்ளைகள் என்று கூடப் பரிவு காட்டாமல் உறவினர்கள் அவர்களை உதிர்ந்த மலர்களாக உதறிச் செல்வதும், அழுதுகொண்டே தன் தங்கையை அள்ளி அணைத்தபடி அன்னையும் இல்லை, தந்தையை முகம் பார்த்ததே இல்லை என்ற நிலையில் பத்து வயதுச் சிறுவன் அழுதபடியே யாருமற்ற உலகத்தினுள் நுழைந்தவண்ணம் இந்தப் பாடல் நிகழும்.

[தாலாட்டுவேன் கண்மணி](https://www.youtube.com/watch?v=2fLDDbk0HZw)

தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத்

தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

தேசம் தான் நம்வீடு

தெய்வம் தான் நம்மோடு

வேறேது சொந்தம்தான்

(தாலாட்டுவேன் கண்மணி)

தன் தங்கையிடம் அந்த அண்ணன் பேசுவதாகவே, அவளுக்கு நம்பிக்கை தருவதாகவே, அவளை ஆற்றுப்படுத்துவதாகவே, அவளிடம் சத்தியம் செய்வதாகவே, அவளுக்காகவே தன் வாழ்வை ஒப்புக்கொடுப்பதாகவே, அவளன்றித் தானில்லை என்று புரியவைப்பதாகவே, அவள் நிழலைக் கூட நல்வாழ்வு வாழச் செய்வதே தன் லட்சியம் என்பதை உறுதிப்படுத்துவதாகவே இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்.

பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன்

பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன்

இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம்

உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம்

நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்

(தாலாட்டுவேன் கண்மணி)

தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன்

நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன்

விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது

உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது

நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்

(தாலாட்டுவேன் கண்மணி )

தாய்மீது ஆணையாய் என்பதில் இந்தப் பாடலின் பெரும்பலம் அந்தச் சத்தியச் சொல்லாடலின் நிகழுங்காலம்தான். தாய் இறந்த கையோடு தங்கையை ஏந்தியபடி வாழ்வில் எங்கே செல்வதெனத் தெரியாமல் அடுத்த வேளை உணவுக்கு ஆதரிக்க மனம்கொண்ட யாரையும் காணாமல் வலம் வருகிற அண்ணன்காரனாக இந்தச் சொல் வெறும் சத்தியமல்ல. இதுதான் அந்த அண்ணனின் வாழ்வாதாரம். இதிலிருந்து தான் தொடங்குகிறது அந்தச் சரித்திரப் பெருங்கதை.

இந்தப் பாடலின் பேரழகு இதன் இறுதி வரிதான். வாலியைத் தவிர வேறாராலும் இப்படி நிறைந்தளித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. சோகம் என்பது தனித்த ஒன்றல்ல. அந்த இருளினூடாகத் தான் அடுத்த வெளிச்சமும் பூக்கும். அதை ஒரு கவிஞனால் மற்ற யாரை விடவும் மிக ஆணித்தரமாக வாக்குத் தத்தமெனவே உரைத்துச் சொல்ல முடியும். அவன் உதடுகளை ஏன் அவனது உள்ளத்தைத் தாண்டுவதாலேயே அந்தச் சொற்களுக்கு உயிர் வந்துவிடுகிறது. ஆம்… கவிஞனின் வரங்களுக்கும் சாபங்களுக்கும் நிச்சயப் பலிதம் நிதர்சனம்.

`நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்’ என்று காவியக் கவிஞர் வாலி பூர்த்தி செய்திருப்பார் இந்தப் பாடலை. வணக்கத்துக்குரிய பாடலாக மாறியிருக்கும் அந்த இழையில். இந்தியப் பெருநிலம் சகோதர பாசம் மற்றும் தாய்ப்பாசம் நண்பர்களிடையிலான நெருக்கம் ஆசிரியர் மீதான பக்தி நன்றிக்குப் பிரதி நன்றி என வெகு ஜன தளங்களில் ஆயிரக்கணக்கான படங்களை உற்பத்தி செய்திருக்கிறது. காலங்கள் மாறினாலும் மேற்சொன்ன வகைமைகள் அப்படியே தங்கிவிட்டன. சொல்லல் முறைகள் மட்டுமே மாறுகின்றன. அப்படி இருக்கையில் அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசப்பிணைதலை முழுக்க நகைச்சுவைப் படமாக எடுக்க முற்பட்ட கலைப்புலி சேகரன், அந்தப் படத்தின் சின்னஞ்சிறிய பகுதியை மட்டும் காவிய விள்ளல் எனவே படைத்தளித்திருப்பார். படத்தின் உயிரைத் தனதே மறைத்துக்கொண்டிருந்த பாடற்கிளி மேற்படி பாடல்.

கங்கை அமரன் இந்தப் பாடலின் தொடக்க இசையிலேயே உயிரடியில் உலுக்கியிருப்பார். தெற்கத்தித் தாள இசையின் ஓங்கி ஒலித்தலைச் சற்றே குன்றச் செய்ததன் மூலமாக பதின்ம வயதின் கேவலை இசைவழி சாத்தியம் செய்திருப்பார் கங்கை அமரன். எந்தவிதமான பாசாங்குமற்ற அதேபோல அதீதமான மிதமிஞ்சிய சோகத்தை வரவழைத்து விடாமல் பொங்கிப் பொங்கிக் குமுறிக் கலைந்து பாவனைகளை உதிர்த்தபடி தன்னை நிகழ்த்தும் கரைதலை சாத்தியப்படுத்தியிருப்பார். இடையிசையும் பாடலின் இறுதியும்கூட அத்தனை கச்சிதமாக இருக்கும்.

ஜெயச்சந்திரன் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள். இரண்டு விதமான அனுபவமாக இன்றுவரை நிகழாத பெரும் அற்புதம் இந்தப் பாடல். சலிக்கவே சலிக்காத ஒன்றாக ஒரு சோகப் பாடல் இருப்பது அரிதினும் அரிது. அப்படியான குரல்மலர் இந்தப் பாடல்.

வாழ்க இசை!

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

[காற்றே யாழ் மீட்டு!](https://minnambalam.com/entertainment/2020/08/18/6/vanamellan-senbagapoo-music-series)

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share