வனமெல்லாம் செண்பகப்பூ – 22 – ஆத்மார்த்தி
முதல் படத்திலேயே புகழ் சிகரத்தில் ஏறியவர் இசைஞானி இளையராஜா. தமிழ்த் திரைப்படங்கள் கறுப்பு வெள்ளைக்கும் கலருக்கும் இடையே ஜிக் ஜாக் ஆடிய காலமான எழுபதுகளின் இறுதியில் அறிமுகமானார். இனி வண்ணம்தான் என்று முடிவெடுக்க 80ஆம் வருடமாயிற்று எனலாம். வண்ணமயமான சினிமாவின் இசை ஆட்சியைக் கைப்பற்றினார் ராஜா. மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு மாறிய திரையிசையில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் எல்லாவற்றிலும் புது ரத்தம் பாய்ச்சினார் ராஜா. ஒரு டஜன் இசையமைப்பாளர்கள் பரபரப்பாக இருந்த காலம்தான் இசைஞானி அறிமுகமான காலமாக அமைந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் அப்போது நம்பர் ஒன் ஆக இருந்தார் கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ், வி.குமார் தொடங்கிப் பலரும் தங்களது பாடல்களைத் தந்த வண்ணம் இருந்தபோதுதான் தனித்துவமாய் நிகழலானார் ராஜா.
**பின்னணி இசையின் ராஜ பாதை**
பாடல்களின் போக்கை மாற்றினார் ராஜா என்பது மேலோட்டமான வாதம். பாடல்களின் போக்கை மாற்றியது தொடக்கம்தான். பின்னணி இசையை அதுவரை இல்லாத புத்திசையாகத் தரலானார் ராஜா. பாடல்களின் முக்கிய இழைகளைக்கொண்டு பின்னணி இசைத்தல் என்பது காலம் காலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சம்பிரதாயம்தான் என்றாலும் அதிலும் தன் கையொப்பத்தை இடத் தவறவில்லை இளையராஜா. ஆகச்சிறந்த பாடலின் மைய இசைக் கோவையை எடுத்துக்கொண்டு அதை விதவிதமான சங்கதிகளைக்கொண்டு அதன் உபசரளிகளை உண்டுபண்ணினார் ராஜா. அப்படி அவர் முயன்ற பின்னணி இசைக்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார்கள். ஆள் பார்த்து இசைக்கிறார் ராஜா என்ற குற்றச்சாட்டைக் காலம் காலமாய் அவர் மேல் கல்லெறிகிறாற்போல் எறிந்தவண்ணம்தான் இருந்தது புறவுலகம். அது நிஜமும் இல்லை; பொய்யும் இல்லை என இருபுறத்திலும் சாட்சி சொல்லும் வண்ணம் யாரென்றே முகவிலாசம் அற்ற புதியவர்களுக்கும் மாபெரும் இசையை மகா உன்னதப் பாடல்களை எல்லாம் அள்ளி வழங்கினார் ராஜா. இன்னொரு பக்கம் சிறப்பான படைப்பாளர்களுக்குத் தன் நியாயம் செய்தலாகவே தனித்துவ இசையை நுட்பம் குன்றாமல் எடுத்துத் தரவும் மறக்கவில்லை. இப்படி தன் இசை ஆட்சிக்காலத்தின் எல்லாத் தருணங்களிலும் ராஜாவின் இசையை மையப்படுத்திய பலவிதமான துணைத் தரவுகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.
இளையராஜாவுக்கு கதையோ, சொன்ன விதமோ, நடிகர்களின் பங்கேற்போ என ஏதாவது ஓர் அம்சம் பிடித்துவிட்டால் போதும். தன் பொக்கிஷத்தைத் திறந்து இசையென்னும் நவமணிகளை அள்ளி இறைத்துவிடுவதை வழக்கம் செய்திருந்தார். முகவரி தேடிப் படவுலகம் புகுந்த எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் புத்தம் புதிய படங்களுக்குத் தன் உலகத் தரமான இசையை வாரி வழங்கியதன் மூலமாக அத்தகைய படங்களைத் தூக்கி நிறுத்தியதோடு அந்தப் படைப்பாளுமைகளின் வாழ்கால முதல் பெருமிதமாகவும் தன் இசையை, பாடல்களை அமைத்துத் தந்தவர் இசைவேந்தன் இளையராஜா.
ரஞ்சித் குமார் தனக்கென்று தனித்துவமான படங்களை உருவாக்க விழைந்த புத்தம் புதிய கதைசொல்லி. இவரது முதல் படமான உதயமாகிறது படத்துக்கு இசையமைத்தவர் ஏ.ஏ.ராஜ். இவர் தான், ஒருதலை ராகம் படத்துக்குப் பின்னணி இசையை அமைத்தவர். ராஜின் இசையில் `கண்ணா உன்னருளால் யாவும் இயங்கும்’ என்ற பாடல் கர்னாடக சங்கீத இசைக்கோவையில் உருவாக்கப்பட்ட பாடல். பாலசுப்ரமணியம் பாடியது. ரஞ்சித் குமார் எம்ஜி.ஆரின் பெரும் ரசிகர். ரஞ்சித், ரஞ்சித் குமார், நம்பிராஜன், எம்.ஜி.ஆர் நம்பி என்ற பெயர்களிலெல்லாம் அவர் இயக்கிய படங்களில் `அன்பே ஓடிவா’ இளையராஜா இசைத்தது. பாடல்களும் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குங்குமப்பொட்டு படத்தில் ரஞ்சித் குமாரே நாயகனாக நடித்தார். நிலா என்ற படம் தேவா இசையில் ஜெயராம் – வினிதா நடித்தது. சந்திரலேகா படம், இளையராஜா இசையில் விஜய் நடித்த படம். பாடல்களும் நல்ல ஹிட் ஆகின. அதில் ஒன்று, அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்
திரைப்படக் கல்லூரியைக் கதைக்களமாக வைத்து ரஞ்சித் குமார் இயக்கிய படம் மஞ்சள் நிலா. சுரேஷ், கலா ரஞ்சனி, தியாகு, குமரிமுத்து, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பின்னணி இசையிலும் பாடல்களிலும் தனித்த அக்கறையைச் செலுத்தியிருப்பார் இளையராஜா. `பூந்தென்றல் காற்றே வா வா’ என்ற பாடல் இன்றளவும் மனம் கொய்யும் மலர். ரேடியோக்களில் தவழும் பாடல் முல்லை.
**முத்துலிங்கத்தின் முத்தான மொழியாடல்கள்**
கீழ்க்காணும் பாடலைப் பாடியவர் அஷோக். இதை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இசை இளையராஜா. முத்துலிங்கம் தமிழில் முத்தான பல பாடல்களை எழுதியவர் என்பதற்கு இந்தப் பாடலின் வரிகளும் கூடுதல் சாட்சியங்கள். அஷோக் பிற்காலத்தில் தலைவாசல் படத்தில் `வான் நிலவே’ பாடலையும் அமராவதி படத்தில் `உடலென்ன உயிரென்ன’ என்ற காலத்தால் அழியாத பாடல்களையும் தந்தவர். இன்னிசைக் கச்சேரிகளில் பழம்பெரும் குரல் மேதை சி.எஸ்.ஜெயராமனின் பாடல்களை அவர் குரலில் பாடுபவரான அஷோக்கின் சொந்தக் குரல் மிக மிக உன்னதமான தனித்துவம் பெருக்கெடுக்கிற குரல் என்றால் தகும்.
முத்துலிங்கத்தின் அபாரம், எளிமையான புழக்கச் சொற்களைக்கொண்டு வலிமையான கருத்துகளை இசைக்கு இயைந்து எதுகையும் மோனையும் சந்தமும் நயமுமாய்ப் பளிச்சிடுகிற மொழியாடல்களைத் தன் பாடல்களில் விளைவிப்பதுதான். இந்தப் பாடலின் ஆன்மாவாக சொல்வழி இயற்றிய சோகம் ஒன்றின் தனியுருவாகவே இதன் வரிகள் படர்வதை உணர முடிகிறது.
பாடலை இசையரசன் துவக்கித் தருவதே அட்டகாசம். சுண்டிச்செல்கிற இசையிழை. மெல்ல அதிகரிக்கிற ஸ்வரப் பெருக்கம். மனத்தின் மூலையில் நன்கு தன்னை செருகிக்கொள்கிற துவக்க இசை. பெரும் துக்கத்தைப் பக்கத்தில் வந்து அறிவித்துச் செல்கிற இதே இசைச்சுட்டியை மைய இசையாக்கி, ‘நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம்’ பாடலைப் பின்னியிருப்பார் ராஜா. இரண்டும் இரு வேறு திசைகளாகவே விலகி ஒலித்தாலும் உள்ளே உறைவது ஒரே இசையெனும் மறைபொருள் என்பதுதான் இளையஜாலம்.
காற்றே யாழ் மீட்டு இவர்
கண்ணீர்க் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி
பல்லவி முடியும் இரண்டு வரிகள் போதும் காலத்துக்கும் முத்துலிங்கத்தின் பெருமை பறைசாற்றிட.
**இசை வழி அற்புதங்களின் கீர்த்தனை மழை**
பல்லவியை எடுத்தாள்வதே சொல்லில் வராத சோகம் ஒன்றின் விலாசமற்ற வீதிகளில் மூடிய கண்களுடனான அலைதலை குரலெங்கும் படர்த்துவதாக அமைகிறது. அஷோக்கின் வேறார்க்கும் வாய்க்காத குரலின் நுட்பம் இஃது.
எந்த ஒரு பாடலாகட்டும்… பல்லவி முடிந்து முதல் சரணத்தை நோக்கிச் செல்கிற இசை மொட்டு மாத்திரம் நன்கு அமைந்துவிடுமேயானால் மொத்தப் பாடலும் தப்பிப் பிழைப்பதற்கான உயிர்த்திரவத்தை அதுவே சுரக்கும் என்பது எழுதப்படாத விதி. பல பாடல்களில் அப்படியான சங்கதிகளைத் தனக்கே உண்டான தனித்துவத்தோடு கையாண்டிருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடல் அவரது உக்கிரம் தெறிக்கும் இடையிசைக்கான சான்று.
இன்னும் நுட்பமாகப் பார்த்தோமேயானால் இதே இயக்குநரின் இன்னொரு படமான சந்திரலேகாவுக்கு இசையமைக்கையில் ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ பாடலில் இந்தப் பாடலின் தொடர்பிசையாகவே கொண்டு செலுத்தி அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் ராஜா. இதெல்லாம் சாதாரண மானுட ஞாபகமோ, எத்தனமோ கொண்டு விளைவித்துவிட முடியாத அபாரங்கள். இசைவழி அற்புதங்கள். ராஜா ஒருவரால் மாத்திரமே சாத்தியமாகும் கீர்த்தன மழை.
மலர் ஆரங்களைத் தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
வெறும் கோயில்கள் எங்கெங்கும் ஆராதனை
கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை
ஆறாதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்
சரணத்தின் ஒவ்வொரு வரியும் நெளிந்து சுழிந்து புகுந்து கலைந்து பாடப்படுவதை எப்படி ரசிப்பது என்றே தெரியாமல் திகைக்கச் செய்வதுதான் ராஜ வேலை.
காற்றே
இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு உண்ணச் சோறும் இல்லை
இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்
காற்றே
கலையின் மாபெரிய ஆச்சரியம், பாடல்களின் ஊடாக மனித மனம் அடைய நேர்கிற சோகம். அது பொய் என்றாலும் நிஜமென்றேதுமில்லாத பொய் என்பதுதான் இசையை, பாடல்களை, குரலை, வரிகளை என எல்லாவற்றையும் அவற்றின் பிறப்பிடமெனும் மெய்மையினின்றும் எடுத்துப் பறித்து ரசிக மனமெங்கும் பதியனிட்டுத் தருகிறது. கடவுளுக்கு அருகேயோர் இடத்தை ரசிகன் மூடிய கண்களினூடாகப் பெற்றுக் கொள்ள இயலுகிறது. இசையால் மட்டுமே ஆகிற மாயவேலை அது.
வாழ்க இசை!
(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))
[நெஞ்சில் இனிக்கும் தமிழ்!](https://minnambalam.com/entertainment/2020/08/17/6/vanamellan-senbagapoo-music-series)
வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.
�,”