Hஇசையின் சித்து விளையாட்டு!

Published On:

| By Balaji

வனமெல்லாம் செண்பகப்பூ 3 – ஆத்மார்த்தி

எல்லாப் படங்களும் வெளியாவதில்லை. வெளியாகிறதெல்லாம் வென்றிடுவதில்லை. வென்ற எல்லாமும் நிலைத்திருப்பதில்லை. தன்னை நிலைக்கச் செய்கிற பலவற்றுக்கும் இலக்கணமென்றேதும் இருப்பதில்லை. இது பல கலைகளுக்கும் பொருந்துகிறாற்போலவே சினிமா என்னும் மாயக்கலைக்கும் பொருந்தும். பாடல்கள் வெளிவந்து நான்கு வருடங்கள் கழித்துத்தான் அந்தப் படம் வெளியாவதென்பது நிச்சயமாக நல்ல வரமில்லை. ஆனால், `காஷ்மீர் காதலி’ என்னும் இசை அற்புதத்துக்கு அதுதான் நடந்தது. அதைப் பார்க்கும்முன் சற்று கன்னட தேசம் சென்று வருவோம்.

**ராஜ்குமாரின் இசைத்திறன்**

ராஜ்குமார் ராட்சசன். மற்ற மொழிகளின் உச்ச நட்சத்திரங்களுக்கும் ராஜ்குமாருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அங்கே அவரே எம்.ஜி.ஆர். அவரே சிவாஜி. கசந்தாலும் இனித்தாலும் அதுதான் நிஜம். போட்டிக்கு ஆளே இல்லாத கன்னட ராஜ்குமார் மகா சக்ரவர்த்தி. சொந்தக் குரலில் பாடி நடித்த நம்பர் ஒன் நடிகர்களில் முக்கியமானவர் ராஜ்குமார். இன்னும் அந்தப் புகழைப் பல மொழிகளில் வேறு யாரும் தகர்க்கவில்லை. ராஜ்குமார் தொழில்முறைப் பாடகர்களின் வரிசையில் எழுதுவதற்கு எள்ளளவும் குறைவற்ற ஒரு பெயர். **அவரது இசைத்திறனும் குரல் வன்மையும் தனியே விரித்து எழுதப்பட வேண்டியவை. பல அற்புத சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அவர் படம் பொறித்த, அவர் குரல் தாங்கிய தனி ஆல்பங்கள் உள்ளன.***

ராஜ்குமாரும் வாணி ஜெயராமும் நிறைய நிறைய பிரபல பாடல்களைப் பாடியிருந்தாலும் இங்கே பேசப்படும் பாடலை அவரோடு பாடியவர் எஸ்.ஜானகி. அந்தப் பாடல் `சின்னத மல்லிக ஹூவே’. படம் ஹூலியா ஹாலின மேவு. 18ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் வாழ்ந்த செங்குமணி என்ற வீரனொருவனின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட புனைவுச் சித்திரம் இந்தப் படம். இதில் அவருடன் இணைந்து நடித்தவர் ஜெயப்ரதா. திரைக்கதையை எழுதியவர் கவிஞர் உதயஷங்கர். அவர் எழுதியதுதான் இந்தப் பாடலும். கன்னட இலக்கியத்தில் புகழ்வாய்ந்த நாவலாசிரியரான பாரதிசுதாவின் பல படைப்புகள் திரை கண்டன. இந்தப் படம் அவற்றிலொன்று. இயக்கியவர் கன்னட இயக்குநர் விஜய்.

**இளையராஜாவின் ஆசிரியர்**

இனி, இசை விஷயத்துக்கு வருவோம். ஜி.கே.வெங்கடேஷ் ஆந்திரத்தைத் தாயகமாகக்கொண்டவர். இந்தியத் திரையிசை மேதைகளில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. இசைஞானி இளையராஜா இவரிடம் குறிப்பிட்ட காலம் பணி புரிந்தது வரலாறு. இளையராஜாவின் பாடல்களின் நகர்திசை, அவற்றின் ட்விஸ்ட் எனப்படுகிற சுழியும் தன்மை, பல பாடல்களினுள்ளே எதிர்பாராத பரீட்சார்த்த முயற்சிகள், சின்னச் சின்ன இசைக்கூட்டுக்கள் எனப் பலவற்றிலும் வெங்கடேஷின் செல்வாக்கு உண்டு. எண்ணிக்கையளவில் சில நூறு படங்களே உருவாக்கி இருந்தாலும் வெங்கடேஷின் பல பாடல்கள் காலத்தால் அழியாத கல்வெட்டுகளாக நிற்பவை. [இந்தப் பாடல்](https://www.youtube.com/watch?v=BHRqmdE0cg0) அப்படியானவற்றில் ஒன்று.

ஸ்வரங்களைப் பெருகச் செய்வது வெங்கடேஷின் அலாதியான தனித்துவம். குரலால் என்னென்ன வித்தியாசங்களை, உபநுட்ப சங்கதிகளைப் பாடலெங்கும் விளையச் செய்ய முடியும் என்பதில் பெருங்கவனம் காட்டியவர் வெங்கடேஷ். பாடலில் ஆங்காங்கே வினவுவதும் சிணுங்கிப் பதிலளிப்பதுமாகக் காதல் உணர்வுகளை, அவற்றின் அந்நியோன்னியத்தை, அவற்றுக்கே உண்டான இயல்வாழ்க்கைத் தோற்றங்களினூடாகப் பாடல்களுக்குள் வரவழைத்தவர் வெங்கடேஷ். பாடகராகவும் பரிமளித்த வெங்கடேஷ், சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.

**இசையின் சித்து விளையாட்டு**

இந்த இடத்தில் வேறொரு பாடலைக் கொண்டுவருவோம். இசையில் மாத்திரமே சாத்தியமாகும் அபாரமான நிரவல்களிலொன்றை இந்தப் பாடலின் பல்லவியின் இறுதி வரியில் பெயர்த்தியிருப்பார் வெங்கடேஷ். முதண்முறை கேட்கும்போதே மற்றொன்றின் ஸ்பரிசத்தை மனத்தில் நிகழ்த்தும். அதன் நுண்ணிய இழையினைப் பற்றிக்கொண்டு அந்தரத்தில் நடைபோடத் தெரிந்தவர்களுக்கு வேறொரு பாடலின் வேறொரு திருப்புச்சுழியாய்க் கிட்டும்.

**பெண்ணென்று எண்ணிப் பேசாமல் வந்த பொன்வண்ண மேனி சிலையே வா…**

இந்த வரி, `பூஜைக்கு வந்த மலரே வா’ பாடலில் வருவது. பாத காணிக்கை படத்துக்காக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் உருவாக்கிய அற்புதம் இந்தப் பாடல். இந்த வரியின் அதே நகர்தலை மேற்காணும் கன்னடப் பாடலின் பல்லவியின் ஈற்றாக உருக்கொடுத்திருப்பார் வெங்கடேஷ். `குழலும் யாழும் இல்லை, குழந்தையின் இனிய குரலுக்கு முன்’ என்ற வள்ளுவ வாக்குக்குச் சற்றும் குறைவில்லாக் குரலில் ராஜ்குமார் பாடும்போது சகல மனமும் உருகும். உடன் பாடும் ஜானகியின் ஜாலவித்தைக் குரலும் மாயம் நிகழ்த்தும்.

தமிழில் இதே பாடலை இதே வெங்கடேஷ் தந்திருக்கிறார். எண்பதுகளில் ரேடியோ ஹிட்ஸ் நினைவிலிருக்கும் அன்பர்களால் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் இடம்பிடிக்கும். கேட்காதவர்களுக்குக் குறையொன்றுமில்லை. மேற்சொன்ன ‘பூஜைக்கு வந்த மலர்’ சங்கதி உட்பட கன்னடப் பாடலின் அத்தனை உன்னதங்களையும் குழைத்துப் பண்ணியதுதான் தமிழில் இந்தப் பாடலும்.

படத்தின் பெயர் `காஷ்மீர் காதலி’. இசைத்தவர் வெங்கடேஷ். நடித்தவர் ராஜ்குமார்தான். ஆனால், கன்னட சூப்பர் ஸ்டார் அல்ல. இவர் தமிழ்ப் புதுமுகன். பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர். முழுப் பெயர் ராஜ்குமார் சேதுபதி. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ‘தேன் பூவே பூவே வா’ பாடலில் தோன்றுபவர் இவர்தான். பாடியவர் நம் காலத்தின் மகா குரலாளன் எஸ்.பி.பாலசுப்ரமணியம். உடன் பாடியவர் அதே எஸ்.ஜானகி. [இந்தப் பாடலில்](https://www.youtube.com/watch?v=wDiwXWkMU0M) கன்னடத்தின் அதே மெட்டும் தொனியும் இடம்பெற்றாலும் இடையிசையை முற்றிலும் மாற்றி அமைத்திருந்தார் வெங்கடேஷ். இதுதான் இசையின் உள்ளே சித்து விளையாட்டு.

ஆ: அழகிய செந்நிற வானம்

அதிலே உன் முகம் கண்டேன் (2)

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து

கண்ணோடு நின்ற அழகோ..

பெ: அழகிய …

ஆ: கண்கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் (2)

காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்

என்னென்னதான்… ஹஹ்… நாணமோ.. பாவமோ…

பெ: அழகிய…

பெ: ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது.. (2)

ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது

அந்தாதி நான்… பாடவோ… கூடவோ…

ஆ: அழகிய

**காலம் கடக்கும் இசை**

ராஜ்குமார் என்ற அசுரன் பாடிய பாடலைத் தன் ஒப்பற்ற குரலால் மீட்டுத் தனதாக்கினார் பாலசுப்ரமணியம். காஷ்மீர் காதலி மறக்க முடியாத ஒலிவழி வைரம். இந்தப் படம் 1980ஆம் ஆண்டுவாக்கில் வெளியாகியிருக்க வேண்டியது. பதிலாக 1984இல்தான் வெளிவந்தது. `[காதல் என்பது மலராகும்](https://www.youtube.com/watch?v=KT9s7VR1PLU)’ பாடலை பி.சுசீலா பாடினார். `பூ போன்ற பெண்களே பொன்நாட்டின் கண்களே’ பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடினார்.

ஒரு படத்தின் பாடல்களும் அதற்காக உருவாக்கப்படுகிற இசையும் அதன் கதைச் சூழல் போன்ற முன் தேவைகளைத் தாண்டி வேறொன்றாக மலரும்போதுதான் காலம் கடக்கின்றன. அந்த வகையில் காஷ்மீர் காதலில் மதிஒளி சண்முகம் இயக்கத்தில் உருவான படத்துக்காக வெங்கடேஷ் உருவாக்கிய இன்னொரு பாடலும் நிரந்தரச் செல்வாக்கோடு விளங்குவதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயச்சந்திரனும் சுசீலாவும் பாடிய `[சங்கீதமே என் தெய்வீகமே](https://www.youtube.com/watch?v=LkhVhE9r7vc)’ என்ற பாடல்தான் அது. முழுப் பாடலுக்கும் பின்னணி இசையாகக் கல்யாண மேள இசைக்கோவையை அமைத்திருப்பார் வெங்கடேஷ். ஆக, மென்மையான தன் குரலால் சன்னமான விளக்கொளிபோல் இந்தப் பாடலை அணுகினார் ஜெயச்சந்திரன். அநாயாசமான சுசீலாவின் குரல் வாஞ்சை பொங்க முழுப் பாடலையும் தன்வயமாக்கிக்கொண்டது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனத்தில் படரும் சின்னஞ்சிறிய நிம்மதி அரிதானது.

**வாழ்க இசை!**

(((தொடரின் அடுத்த பகுதி நாளை)))

[கனா வரும், அதில் நிலா வரும்!](https://minnambalam.com/entertainment/2020/07/29/5/vanamellam-senbagapoo-music-series)

வாசகர்களின், வேண்டுகோளுக்கு இணங்க வனமெல்லாம் செண்பகப்பூ இசை தொடர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share