இயக்குநர் விஜய் பாலாஜி என்பவரை ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களும் தேடிவருகிறார்கள். யார் இந்த விஜய் பாலாஜி என்று விசாரித்தால் சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்துள்ளது.
ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தின் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி . இவரிடம் உதவியாளராக சினிமா வாழ்க்கையைத் துவங்கியவர் விஜய் பாலாஜி. அதன்பிறகு, இராமநாராயணன் , பாலு ஆனந்த், சி.ரங்கநாதன், சுரேஷ்கிருஷ்ணா, ராஜீவ்மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மெளனராகம்’ எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பிறகு, இந்தியில் வெளியான சச்சின் டெண்டுல்கரின் ஆவணப் படத்தை தமிழில் ‘சச்சின் பல கோடி கனவுகள்’ எனும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்தார். இயக்குநராக பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால், மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு படங்களை டப்பிங் செய்யும் பணிகளில் இறங்கினார்.
அபப்டி, அல்லுஅர்ஜூன் நடிப்பில் வெளியான ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தை தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்தார். அதன்பிறகு, சிரஞ்ஜீவி நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை தமிழுக்கு ஏற்ற ஸ்டைலில் வசங்களை எழுதியவர் இவரே. இப்படியாக இவரின் சினிமா பயணத்தில் , சமீபத்தில் பணியாற்றிய படம் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்த வருடம் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. இந்தப் படம் தெலுங்கில் பெரிய ஹிட். த்ரி விக்ரம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் சன் நெக்ஸ்டில் வெளியானது. இந்தப் படத்துக்கான தமிழ் மொழிமாற்று பணியை மேற்கொண்டவர் இயக்குநர் விஜய் பாலாஜி.
டப்பிங் என்பது தெரியாத அளவுக்கு தெலுங்கு உதட்டசைவுக்கு எற்ப தமிழில் வசனங்களை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் ‘புட்ட பொம்மா’ பாடல் இந்திய அளவில் பெரிய ஹிட். அதே ’புட்ட பொம்மா’ பெயரிலேயே தமிழிலும் பாடல்களை அமைத்தார். அல்லு அர்ஜூனின் கேரக்டர் பெயரான ‘பண்டு’-வை அப்படியே தமிழிலும் பயன்படுத்தினார் என ஸ்கிரிப்டை தொந்தரவு செய்யாமல் தமிழில் மொழிமாற்றம் செய்திருப்பார். இதனால், சினிமா வட்டாரத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
தெலுங்கிலிருந்து தமிழில் டப்பாக இருக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள், இப்போது விஜய்பாலாஜியைத் தேடிவருகிறார்கள். இப்போது, பல தெலுங்குப் படங்கள் இவரிடம் லைன் அப்பில் இருக்கிறது.
அலா வைகுந்தபுரம்லோ படமானது ‘வைகுண்டபுரம்’ எனும் பெயரில் தமிழில் வெளியான அதே நேரத்தில், மகேஷ்பாபுவின் சர்லேறு நீக்கெவ்வறு’ படமானது ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ எனும் பெயரில் வெளியானது. ஆனால், இப்படத்துக்கு தமிழில் பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**-ஆதினி**�,