தொகுப்பாளராக ஓடிடியில் அறிமுகமாகும் வடிவேலு

entertainment

தமிழ் சினிமாவின் சிரிப்பு பட்டாசாக வலம் வந்தவர் வடிவேலு. வருடத்திற்கு பத்து பதினைந்து படங்கள் என கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு வருடத்துக்கு ஒரு படமே பெரிய சவாலாகிவிட்டது. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படம் வெளியானது. அதன்பிறகு, எந்தப் படமும் நடிக்கவில்லை. இவர் நடிப்பதாகச் சொல்லப்பட்ட இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ன ஆனதென்றே தெரியவில்லை. வெப் சீரிஸ் ஒன்று நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார் அதுவும் நடக்கவில்லை. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. அதோடு, ‘எம் மகன்’ பட இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படம் என்ன ஆனதென்றும் தெரியவில்லை.

கடந்த லாக்டவுன் நேரத்தில், திரைத்துறை நடிகர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு ஒன்று நடந்தது. அதில், ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக படம் இல்லாமல் இருக்கிறோம் என நடிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, வடிவேலு பதிலுக்கு ஒன்று சொன்னார். பத்து வருஷமா நான் லாக் டவுனில் இருக்கிறேன் என்று கூறியது நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்செய்தியும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பட வாய்ப்பு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் இருந்தாலும், ஜாலியாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் வடிவேலு.

திமுகவின் ஆட்சிக்காலம் துவங்கியிருப்பதால், வடிவேலுவின் வீட்டருகில் தைரியத்துடன் திரையுலக காற்று வீசுவதாகக் கூறப்படுகிறது. சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை மற்றும் கத்திச் சண்டை படங்களில் நடித்தார் வடிவேலு. இந்த மூன்று படங்களிலுமே காமெடி பட்டாஸாக இருக்கும். குறிப்பாக, தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த கேரக்டர் தான் ‘நாய் சேகர்’. இந்த ரோலை மையமாகக் கொண்டே ஸ்பின் ஆஃப் திரைப்படமாக ‘நாய் சேகர்’ எனும் பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. அதற்கான பணிகள் ஒருபக்கம் மும்மரமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஓடிடியில் அறிமுகமாக இருக்கிறார் வடிவேலு. பிரபல ஓடிடி தளமொன்றில் கலகலப்பான காமெடி டாக் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறாராம் வடிவேலு. அதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்காம். தெலுங்கில் ஹிட்டான ‘ஆஹா’ தமிழுக்கும் வருவதாகச் சொல்கிறார்கள். அந்த ஓடிடியாக இருக்கலாம் என்கிறார்கள். இவருடன், தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ளவும் இருக்கிறார்கள்.

ஓடிடி குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் வடிவேலுவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவருகிறதாம். வடிவேலுவின் சந்தேகங்கள் தீர்ந்தப் பிறகு, அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்த பெரும் அனுபவம் கொண்டவர் வடிவேலு. அவரின் நினைவுகளைப் பகிர்ந்தாலே, ஷோ செம ஹிட்டாகும் என்கிறார்கள். ஆக, எக்கச்சக்க மீம் டெம்ப்ளேட்டுகள் ஆன் தி வே என்பது மட்டும் உறுதி!

**-ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *