கொரோனா அச்சுறுத்தலானது உலக மக்களையே ஆட்டம் கொள்ள வைத்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் அதிகரித்துவருகிறது. அரசியல் தலைவர்களில் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.
கொரோனா இரண்டாம் அலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் திரைத்துறைக்கான படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு படப்பிடிப்புகள் இந்த ஜூலை 1ஆம் தேதியிலிருந்து துவங்கி நடந்துவருகிறது. பெரும்பாலும் அனைத்துப் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளும் தொழில் நுட்பக் கலைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனைத்துப் படப்பிடிப்பிலும் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுலை 12ஆம் தேதி காரைக்குடியில் துவங்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்பதால் கடந்த ஜூன் 23ஆம் தேதியே தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூர்யா. இப்படி, படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் பெரும்பாலான உச்ச நடிகர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இப்படியான சூழலில், ஜூலை 01ஆம் தேதியிலிருந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்துவருகிறது. நடன காட்சிகளுக்கான படப்பிடிப்புடன் 20 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்துவருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே படத்தில் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை.
அதுபோல, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சியை ஹைதராபாத்தில் எடுத்துவிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. படத்தில் நடிக்க வேண்டிய நாயகி ஹீமா குரேஷி ஆங்கில படமொன்றில் நடித்துவருவதால் அவருக்காக படக்குழு காத்திருக்கிறதாம். இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்புத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தும் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை.
ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொண்டதை வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர். சொல்லப் போனால், ஒரு நடிகர் தடுப்பூசி போட்டுக் கொள்வது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். நடிகரைப் பார்த்து ரசிகர்களும் விழிப்புணர்வு பெறுவார்கள். தயக்கமின்றி தடுப்பூசியை எடுத்துக் கொள்வார்கள். விஜய் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவைக் கைக்குள் வைத்திருக்கும் விஜய், அஜித் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா, அப்படிப் போட்டுக் கொண்டிருந்தால் வெளிப்படையாக தெரிவிப்பதில் என்ன தயக்கம் என்கிற கேள்வி எழுகிறது.
**- தீரன்**
�,