கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் அதைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி.
‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், சம்பத், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரித்துள்ளார்.
விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா மற்றும் ஊரடங்கு அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ‘அரண்மனை 3’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. முதல் இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 அதிக செலவில் படமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
படத்தின் பணிகள் முடிந்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டு, தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. தான் தயாரிக்கும் படத்தை முதல் பிரதி அல்லது தமிழ்நாடு திரையரங்கு உரிமையை விற்பனை செய்துவிடுவது குஷ்பு சுந்தரின் வாடிக்கை. கொரோனா தொற்று ஊரடங்கு முடிவுக்கு பின் திரையரங்கு திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்த பார்வையாளர்கள் லாபம், தலைவி படங்களுக்கு வரவில்லை. இதன் காரணமாக புதிய படங்களின் விநியோக உரிமை வியாபாரம் செய்வது சிரமமான காரியமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ‘அரண்மனை 3’ படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. நேற்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு ‘அரண்மனை 3’ படம் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்து திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது திமுகவின் வாடிக்கை. இந்த முறை அப்படி நடக்காது என்று எல்லோரும் கூறி வந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக ரெட் ஜெயன்ட் அரண்மனை 3 படத்தின் மொத்த உரிமையை வாங்கியிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரண்மனையிலிருந்து மன்னர்கள் ஆட்சி செய்ததை போல திமுக கழகம் அரண்மனை படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
**-இராமானுஜம்**
�,