�த்ரிஷ்யம் 2வுக்காக மீண்டும் நடிக்க வரும் நவ்யா.. தமிழில் கெளதமி வருவாரா?

Published On:

| By Balaji

ஒரு மொழியில் ஹிட்டாகும் படமானது மற்ற மொழிகளில் ரீமேக் ஆவது இயல்பாக நடக்கும். அதுவே, ரீமேக் செய்யப்படும் மொழிகளிலும் படம் ஹிட்டாவதென்பது அரிதாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், ஒரு படமானது ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் சொல்லிவைத்தது போல வெற்றியைக் கொடுத்ததென்றால் அது, த்ரிஷ்யம் படம் மட்டுமே.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் பெரிய வெற்றியைத் தந்ததோடு, தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் என இந்திய மொழிகளிலும் , உலகளவில் சிங்களம் மற்றும் சீன மொழியிலும் வெளியானது. ரீமேக் ஆன அனைத்து மொழிகளிலும் வெற்றியும் பெற்றது. தற்பொழுது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். முதல்கட்டமாக, தெலுங்கு வெர்ஷனின் பணிகள் துவங்கிவிட்டது. தெலுங்கில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் 2014ல் வெளியானது. வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இப்போது, இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.

அடுத்ததாக, கன்னட வெர்ஷன் த்ரிஷ்யம் 2 ரீமேக்கும் துவங்க இருக்கிறது. கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நவ்யா நாயரும் நடித்திருந்தார்கள். த்ரிஷ்யா எனும் பெயரில் இப்படம் வெளியாகியிருந்தது.

இதில் நடித்த நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் எக்கச்சக்கப் படங்களை நடித்தவர் திருமணத்துக்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகினார். நவ்யா நாயர் நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படமே கன்னட த்ரிஷ்யா படம் தான். அதன்பிறகு எந்தப் படமும் நடிக்காமல் இருந்தவர், மீண்டும் த்ரிஷ்யம் படத்துக்காக திரைத்துறைக்குள் வருகிறார்.

த்ரிஷ்யாவில் அவர் நடித்த கதாபாத்திரத்துக்காக மீண்டும் ஏழு வருடங்கள் கழித்து கன்னடத்தில் நடிக்க இருக்காராம் நவ்யா நாயர். வெல்கம்!

த்ரிஷயத்தின் தமிழ் ரீமேக்கானது பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசனுடன் கெளதமி நடித்திருந்தார். தற்பொழுது, கமலும் கெளதமியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், பாபநாசம் 2வில் கமல்ஹாசனுடன் கெளதமி நடிப்பாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

**- ஆதினி **

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share