டி.ராஜேந்தரின் புது தயாரிப்பாளர் சங்கம்: சிம்புவின் இலவச படம்!

Published On:

| By Balaji

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை விட, அவர்களுக்கான சங்கங்கள் அதிகமாகிவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், தற்பொழுது தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உதயமாகியிருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. இதில் முரளி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவித்திருந்தார் நடிகர் டி.ராஜேந்தர்.

அதோடு மட்டும் இருந்துவிடாமல், புதிதாக தயாரிப்பாளர் சங்கத்தையே துவங்கியிருக்கிறார். டி.ராஜேந்தர் துவங்கியிருக்கும் சங்கத்துக்கு ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடக்காமல் இருந்தபோது, பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உதயமானது. இப்போது, டி.ஆரின் சங்கமும் இணைந்திருக்கிறது.

ஆக, முரளி தலைமையில் ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’, பாரதிராஜா வழிநடத்தும் ‘நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’, புதிதாக டி.ஆரின் ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ மற்றும் ஏற்கெனவே இருக்கும் கில்டு அமைப்பு என இப்போதைக்குத் தயாரிப்பாளர்களுக்கு நான்கு சங்கங்கள் இயங்கிவருகிறது.

திரைப்பட ரிலீஸில் எதாவது பிரச்னை என்றால் எந்த சங்கத்தில் முறையிடுவார்கள், இரண்டு வேறு வேறு சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்களுக்குச் சண்டை வந்தால் எப்படி தீர்த்துக் கொள்வார்கள், தயாரிப்பாளர்களுக்கென விதிகள் சங்களுக்கு இடையே மாறுபடும் என புதுப்புது பிரச்னைகளை எப்படி சரி செய்வார்கள் என்று தெரியவில்லை.

இந்நிலையில், டி.ராஜேந்தரின் சங்கத்துக்கு ஆட்கள் அதிகமாக இணையவேண்டும் என்பதற்காக, சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் பண்ணலாம். சிம்பு இலவசமாக அந்தப் படத்தில் நடித்துக் கொடுப்பார். அந்தப் படத்தின் லாபம் சங்கத்தின் செலவுகளுக்காக வங்கியில் வரவு வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். சிம்புவை வைத்து படம் பண்ணலாம் என்பதற்காகவே பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில், விஷால் நடிகர் சங்க பதவிக்கு வரும் போது, விஷாலும் ஆர்யாவும் இணைந்து இலவசமாக ஒரு படம் பண்ணுவார்கள். அதில் வரும் லாபத்தில் சங்க கட்டடம் கட்டப்படும் என்று கூறினார். அது இன்னும் நடக்கவில்லை என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

**-ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel