இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (ஜனவரி 23) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருநாள் தொடரின் முதல் போட்டியை தென்னாப்பிரிக்க வென்ற நிலையில் இரண்டாவது போட்டியையும் தென்னாப்பிரிக்க அணி வென்றிருப்பதால், டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல், “தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் உள்ளூரில் நன்றாக ஆடினார்கள் என்று நினைக்கிறேன். மிடில் ஓவரில் நாங்கள் தவறு செய்தோம்.
தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வி மூலம் நாங்கள் நன்றாக பாடம் கற்றுக்கொண்டோம். முதல் போட்டியில் தவானும், விராட் கோலியும் நன்றாக ஆடினார்கள். இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினார். ஷர்துல் தாகூர் எங்கள் அணிக்கு முக்கியமானவர்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாங்கள் வெற்றிபெற கடுமையாக போராடுவோம். வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம்” என்று ராகுல் கூறியுள்ளார்.
இந்த நிலையில், “இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும். பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய போட்டி குறித்து, “3-0 என தொடரை வெல்வதே எங்களின் இலக்கு” என தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பேசியிருக்கிறார். ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பாடம் கற்றுக்கொண்டே இருக்கும் ராகுல், தான் கற்றுக்கொண்ட வித்தைகளை களத்தில் இறக்கினால்தான் ஆறுதல் வெற்றியாவது சாத்தியப்படும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
**-ராஜ்**
.�,