கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் 50 சதவிகித இருக்கை அனுமதியுடன்தான் நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளிவந்த படங்களுக்கு சுமாரான அளவில்கூட வரவேற்பும், வசூலும் இல்லை. கடந்த வாரம் வெளியான விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ படம் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படம் வெளியீட்டுக்கு முன்பு அந்தப் படம் சம்பந்தமாக வெளியான டிரெய்லர் மற்றும் செய்திகள் கொடுத்த பிரமிப்புக்கு இணையாக படம் இல்லை என்பதால் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. சுமார் எட்டு கோடி ரூபாய்க்கு தமிழக உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு 70% வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 11) நான்கு படங்கள் வெளியிடப்படுகின்றன. அவை பின்வருமாறு:
1. விஜய் சேதுபதி, யோகிபாபு இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள், அனைவரும் கதை நிகழும் கிராமத்தை சேர்ந்தவர்களே. அவர்களின் யதார்த்த வாழ்வியலை எந்தவிதமான சினிமாத்தனமும் இன்றி திரைப்படமாக்கியிருக்கிறார் காக்கா முட்டை மணிகண்டன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளரே நேரடியாக வெளியிடுகிறார்.
2. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்ஐஆர். இந்தப் படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இது கமர்ஷியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3. பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன். அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருள் ஆகும். இந்தப் படமும் தயாரிப்பாளரால் நேரடியாக வெளியிடப்படுகிறது.
4. பிரபல பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் குடும்ப வாரிசு புதுமுகம் கிஷண், அவருக்கு ஜோடியாக பிரியதர்ஷினி நடித்துள்ள படம் ‘அஷ்டகர்மா’. இதற்கு எல்.வி கணேஷ் இசையமைத்திருக்கிறார். தமிழ்ச்செல்வன் இயக்கியிருக்கும் இந்தப் படம் பில்லிசூன்யம் பற்றிய கதையாகும். இந்தப் படத்தையும் தாயரிப்பாளரே வெளியிடுகிறார்.
**-இராமானுஜம்**
Xஇன்று களத்தில் இறங்கும் படங்கள்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel