ஊமைகள் ஏங்கவும், உண்மைகள் தூங்கவும் பார்த்திராதக் கலைஞர் – டி.எம்.எஸ்

entertainment

குதி 1

நிவேதிதா லூயிஸ்

வெள்ளை நிறத்தில் தாய்ப் பூனை ஒன்று அதன் பஞ்சுப்பொதிகள் போன்ற குட்டிகளுடன் மாடிப்படியின் அடியில் படுத்திருந்தது. சரசரவெனக் கடந்த என்னை எட்டிப்பார்த்து மீண்டும் சுருண்டுகொண்டது. பசியுடன் இருந்ததுபோல… பாவம். காலை எட்டு மணி. சென்னை புலியூர் ஹவுசிங் போர்டு காலனியின் காரை பெயர்ந்த ஃபிளாட் ஒன்றில் பூனைக்குட்டிகளை வேடிக்கை பார்த்தபடி, மூன்றாவது மாடியில் குடியிருக்கிறார் டி.விஜயராஜ். பத்தடிக்குப் பத்தடி அறை. அங்கிருந்த சிறிய விளக்கு மாடத்தில் விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. நேர்த்தியாக அடுக்கப்பட்ட சிறு தடுப்புதான் சமையலறை. அறையில் ஒரு டி.வி, பிளேயர், ஷெல்ஃபில் அடுக்கிவைக்கப்பட்ட சில நூல்கள், பிளாஸ்டிக் கோணி ஒன்றில் எக்கச்சக்க டி.வி.டிக்கள். தான் வாழும் இந்தச் சிறிய அறையில்தான் ஒரு ஃபோல்டர் நிறைய பெரும் பொக்கிஷத்தைச் சேகரித்து வைத்திருக்கிறார் விஜயராஜ்.

‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தின் ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ பாடலை எழுதிய தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் திரைப்பாடலாசிரியை ரோஷனாரா பேகத்தைத் தேடி ஆவணப்படுத்தியிருக்கிறார் விஜயராஜ். ரோஷனாரா அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே, விஜயராஜின் நினைவுகளிலிருந்து டி.எம்.சௌந்தரராஜன் என்ற மாபெரும் இசைக் கலைஞர் வெளிப்படத் தொடங்கினார். பேசப்பேச டி.எம்.எஸ் பற்றிய தகவல்களை அடுக்கினார். டி.எம்.எஸ் பாடுவது குறைந்த பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது உட்பட அவரது முழு வாழ்வனுபவத்தையும் 2001ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை, கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் விஜயராஜ் – பிரம்மாண்ட தொலைக்காட்சித் தொடராக. 150 எபிசோடுகள், எண்ணற்ற பேட்டிகள், கணக்கற்ற பாடல்கள் என ரசனையான கோவையாக இருக்கிறது இந்த வெளிவராதப் பொக்கிஷம்.

மதுரையில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்த் திரைத் துறையின் உச்சத்தைத்தொட்ட டி.எம்.எஸ் குறித்துப் பேசும்போதே விஜயராஜின் குரலில் தனி உற்சாகம் கூத்தாடுகிறது. கேரளாவின் பாலக்காட்டை அடுத்த தச்சம்பாரா என்ற சிற்றூரைப் பூர்விகமாகக் கொண்டவர் விஜயராஜ். தந்தை என்.பி.தாமோதரன் கோவையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர். ஆனால், பத்தாம் வகுப்பு வரை படித்த அம்மா மீனாட்சிதான் விஜயராஜுக்குப் பெரும் துணை, வழிகாட்டி.

கலைத் துறை மீது பெரும் காதல்கொண்டிருந்த மீனாட்சி, வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மகனுக்குத் தரும் ‘டிரீட்’ – அன்றைய கோவையின் பிரமாண்ட திரையரங்குகளில் ஒரு சினிமா. வகுப்பறையில் சாதித்துக்கொண்டிருந்த மகனின் அறிவுச் சுக்கானை சினிமாவில் புறம் திருப்பியது மீனாட்சியின் இந்த சினிமாக் காதல். அப்பா தாமோதரனின் கடும் எதிர்ப்பையும் சமாளித்து, தன் மகனை கலைத் துறையில் பெரும் சாதனையாளனாக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி வெறித்தனமாகப் பயணிக்க ஆரம்பித்தார் மீனாட்சி.

கோவையின் பிரபல திரையரங்குகளான ராயல், ராஜா, சரசுவதி போன்ற திரையரங்குகளில் அம்மாவும் மகனும் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து தங்கள் ஆதர்ச நடிகர்களைக் காண்பதுண்டு. சிவாஜி, எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்குச் சில்லறைகளைத் திரையில் சிதறவிடும் ரசிகர்களைக் கண்டு மலைத்துப்போயிருக்கிறார் விஜயராஜ். சினிமா ஊடகத்தை இன்றளவும் தீண்டத்தகாத ஒன்றாகப் பார்க்கும் உலகில், மகனுக்கு அதன்மேல் மோகம் தோன்ற செய்துவிட்டவர் மீனாட்சி. கோவை சரசுவதி திரையரங்கின் அருகிலேயே இவர்களின் வீடு இருந்திருக்கிறது. பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களை இந்தத் திரையரங்கில், ‘புத்தம் புதிய காப்பியாக’ மறு வெளியீடு செய்வதுண்டு. வீட்டிலிருந்தபடியே டி.எம்.எஸ் பாடல்களையும் அதற்கான ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலையும் கேட்டே காதல் கொண்டேன் என்கிறார் விஜயராஜ். “அது ஒரு வெறித்தனமான அன்பு” என்று ஒப்புக்கொள்கிறார்.

‘நல்லதொரு குடும்பம்’ என்ற பாடல் திரையில் வரும்போதெல்லாம் மக்கள் கூட்டம் அரங்கில் கத்துவதுண்டு. முதல் நாள், முதல் ஷோ எப்படியாவது மீனாட்சியும் அவர் மகனும் பார்த்துவிடுவதுண்டு. “படம் பார்ப்பது என்பது வாழ்க்கையின் உச்சக்கட்ட சந்தோஷமாக எங்களுக்கு இருந்தது” என்று சொல்கிறார் விஜயராஜ். ஒரு காலத்தில் இலங்கை வானொலி தன் நேயர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதுகூட தன் ஐயாவின் ‘பிறந்தநாள் இன்று பிறந்தநாள்’ பாடலைப் போட்டுத்தான் என்று நினைவுகூர்கிறார் விஜயராஜ். “ஆனால் அப்போது ஒருமுறைகூட, இந்தக் குரலுக்காக இத்தனை ஆண்டுகள் செலவு செய்து, அவருடன் சில ஆண்டுகள் கிட்டத்தட்ட வாழ்ந்து, அவருடன் வெளிநாடு பயணம் செய்து, அவருடன் ஒரே அறையில் இருந்து பழகி, அவர் என்னை வாழ்த்தி, அவரது அந்திம காலங்களில் நானே அவருக்கு மாபெரும் ஊன்றுகோலாக நின்றேன் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” என்று சொல்கிறார்.

“அவருக்கே மகிழ்வு தரக்கூடிய இடத்தில் நான் இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, என் அம்மா என்னைப் பெற்றதற்கான முழு பலனையும் நான் அடைந்ததாக நினைக்கிறேன்” என்று சொல்கிறார். தன் அம்மாவை மனோகரா படத்தில் வரும் கண்ணாம்பா பாத்திரம்போல என்றே அறிமுகம் செய்கிறார். தன் மகனை மனோகரனாகவே பாவித்தவர், சமூக அக்கறை கொண்டவர், இந்தியாவைக் காப்பாற்றவே தன் மகனைப் பெற்றது போலவும், மாபெரும் சகாப்தத்தை தன் மகன் படைத்துக்கொண்டிருக்கிறான் தன் மகன் என்ற உவகையிலும் பூரித்திருந்தார் என்று சொல்கிறார். சினிமா மேல் ஆசைகொண்ட, கோச்சிங் கிளாஸுக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனை கட்டை விளக்குமாற்றால் அடித்து விரட்டும் அன்னையர் மத்தியில், மீனாட்சி உண்மையில் வித்தியாசமானவர்தான்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்க தன் மகனை மீனாட்சி சென்னை அனுப்பினார். 1989ஆம் ஆண்டு, 531ஆவது போட்டியாளரான தன்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நேர்காணலில் நடிகர் பூர்ணம் விசுவநாதன் தேர்ந்தெடுத்ததை மறக்க இயலாத அனுபவம் என்கிறார் விஜயராஜ். இயக்கம் என்றால் மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்குத் தந்தையின் ஆதரவு கிடையாது என்பதால், நடிப்புப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். நகைகளை அடகுவைத்து தந்த மீனாட்சியம்மாளுக்காக, ஓராண்டில் நடிப்புப் படிப்பை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தன் கனவை சுருக்கிக்கொண்டார் விஜயராஜ்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் அப்போதைய முதல்வராக இருந்தவர் கே.சொர்ணம் அவர்கள். கலைஞரின் அக்காள் மகனான சொர்ணம், எம்.ஜி.ஆரின் 17 படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர். தமிழ்நாடு செய்திப் பிரிவில் கேமரா உதவியாளராக விஜயராஜைச் சேர்த்துவிட்டார் சொர்ணம். கௌரவம் பார்க்காமல் ஸ்டாண்டு, லைட் தூக்குவது, டீ ஊற்றித்தருவது முதல் எல்லாமும் செய்ய வேண்டும் என்று எச்சரித்தே இந்தப் பணிக்கு அனுப்பப்பட்டார். தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் செய்திப்படம் தான் அவரது முதல் அனுபவம். இந்த அடிப்படைதான் தனி ஆளாக ஒரு மாபெரும் திட்டத்தை எடுத்துச் செய்ய துணிவைத் தந்தது என்று சொல்கிறார்.

1989 முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்த வேலை நீடித்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அறிமுகமும் கிடைத்தது. 1996ஆம் ஆண்டு சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து லாரி வாங்கி ஊரில் ஓட்டிக்கொள்ளலாம் என்று திரும்பிச் சென்ற விஜயராஜை மீண்டும் சென்னைக்கு வரவழைத்தவர் பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அவர் இயக்கிய ஏவி.எம்மின் ‘முத்துக்கள் 16’ தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற வருமாறு அழைத்தார். அதிலும் சிறு பாத்திரத்தில் நடித்தார் விஜயராஜ்.

இடையில் அப்பா இறந்துபோக, ஊருக்குத் திரும்பிய மகனை மீண்டும் சென்னைக்கே அனுப்பிவைத்தார் மீனாட்சி. ‘உன் கனவு சினிமா, அது தடைபடுவதில் எனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லி கணவர் இறந்த ஒரு வாரத்தில் மகனை சினிமாவுக்குள் மீண்டும் திருப்பினார். 1993ஆம் ஆண்டு நேரு ஸ்டேடியம் திறப்பு விழாவை அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னின்று எடுத்து நடத்தினார். அப்போது செய்திப் பிரிவில் பணியாற்றிய விஜயராஜ், அவர் அருகே கேமராவுடன் நின்று கொண்டிருந்தார். ஸ்டேடியத்தின் வாயிலுக்கு வெளியே நடிகர் நாகேஷும் டி.எம்.எஸ் ஐயாவும் நின்றுகொண்டிருந்தார்கள். ஸ்டேடியத்தைச் சுற்றி “நான் ஆணையிட்டால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” என்ற டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

வாயிலிலிருந்த காவலருக்கு இருவரையும் அடையாளம் தெரியாததால் உள்ளே அனுமதிக்கவில்லை. “என்னை விடுங்கள், நான் போய் விடுகிறேன்” என்று திரும்பினார் டி.எம்.எஸ். நான் இதைப்பார்த்துப் பதறி அன்றைய ஃபிலிம்ஸ் டிவிஷன் தலைவர் சர்ஃபுதீன் சாரிடம் சொல்ல, அவர் காவலரிடம் சொல்லி, இருவரையும் உள்ளே அழைத்துவரச் செய்தார். “நான் பாடிய பாட்டு நம்மைச்சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது; நான் உள்ளே வர இந்த பாடா?” என்று வேதனையுடன் கேட்டபடி உள்ளே வந்தார் டி.எம்.எஸ். அவரை முதன்முதலில் நான் நேரில் பார்த்தது அங்குதான். அப்போதே டி.எம்.எஸ் ஐயாவை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற விதை மனத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது.

டி.எம்.எஸ் பற்றி மெல்ல விசாரித்தபோது, அவர் ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி போன்று வர்ணிக்கப்பட்டார் என்று வருந்துகிறார் விஜயராஜ். “‘யாரையும் அருகே சேர்த்துக்கொள்வதில்லை. ஆணவம் பிடித்தவன். எம்.ஜி.ஆரிடம் சண்டை போட்டார். இளையராஜாவைப் பகைத்துக்கொண்டார். யாருடனும் ஒத்துப்போகமாட்டார்’ – இதுதான் அவரைப் பற்றி எனக்கு முதலில் சொல்லப்பட்டது. அடுத்தவர் சொல்வதை வைத்து எப்படி முடிவெடுப்பது? நாமே நேராக அவரைப் பார்த்துப் பேசலாம் என்று மந்தைவெளியிலுள்ள அவர் வீட்டுக்குத் தனியாகச் சென்றேன். இன்முகத்துடன் என்னை வரவேற்றுப் பேசினார். திரைப்படக் கல்லூரியில் படித்தவன், திருலோகசந்தர் சாரிடம் பணியாற்றியவன் என்று சொன்னதும் அவர் முகம் மலர்ந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எடுக்க வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் சொன்னேன்” என்று சொல்கிறார். ஏன் அவரது வாழ்க்கையைத் தொடராக்க நினைத்தீர்கள் என்ற என் கேள்விக்கு, “அவரைப் பற்றித்தான் அத்தனை நெகட்டிவாக சொல்லப்பட்டது. எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அவரது ஆதங்கத்தை அவர் செல்லும் இடமெல்லாம் பதிவு செய்தும் வந்தார். அது என்னை பாதித்தது” என்றும் சொல்கிறார்.

ஆனால் உள்ளத்தில் உள்ளதை வெளியே சொல்லும் யதார்த்தவாதி, வெகுஜன விரோதியாகவே பார்க்கப்படுகிறான் என்பதை அவருடன் பழகியதில் புரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார் விஜயராஜ். “‘உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது; உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது’ என்று பாடியதைப் போல வாழ்ந்த குழந்தைதான் டி.எம்.எஸ்ஸே தவிர, யார் குடியையும் அவர் கெடுத்தவரல்லர், ஊழல்வாதியல்லர் அவர்” என்று தெளிவாகச் சொல்கிறார் விஜயராஜ். “டி.எம்.எஸ்ஸின் தொண்டை செய்த தொண்டை இனி யாரும் செய்ய முடியாது” என்று கவிஞர் வாலி அடிக்கடி சொல்வார் என்றும் நினைவுகூர்கிறார்.

“உங்கள் கதையை சீரியலாக எடுக்கிறேன்” என்று சொன்னதும் சிரித்துவிட்டாராம் டி.எம்.எஸ். “தம்பி, நீங்கள் வளர வேண்டியவர். சினிமா ஏதாவது எடுங்கள். போங்க தம்பி. ஆல் தி பெஸ்ட். ஓய்வாக இருக்கும்போது வாருங்கள்; எவ்வளவு வேண்டுமானாலும் பேசுவோம். இந்த அன்பு என்றும் தொடரட்டும். பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து போயிருக்கிறார். அப்படியே விஜயராஜின் உற்சாகம் முழுக்க வடிந்து போனது. சன் டி.வி, விஜய் டி.வியில் டி.எம்.எஸ்ஸின் அரை மணி நேரப் பேட்டிகள் ஒளிபரப்பானது. அவ்வளவு தானா அவரது சாதனை என்று சிந்தித்து வருத்தமடைந்தார் விஜயராஜ். மனத்திடத்தை மட்டும் கைவிடவில்லை. அடிக்கடி டி.எம்.எஸ்ஸைச் சந்தித்துவந்தார். “மீண்டும் ஒருமுறை அவரிடம் மெதுவாகக் கேட்டபோது, இதனால் என்ன நன்மை நடந்துவிடப் போகிறது?” என்று மறுத்தார். என் பாடல்கள் இருக்கின்றன, அதை மக்கள் கேட்டால் போதுமே என்றார். “இம்முறை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால், இங்கு எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு ஊருக்குப் போய்விடுவேன் என்றும், எனக்கு இதைத்தவிர வேறு வேலையில்லை என்றும் கறாராகச் சொன்னேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டார்” என்கிறார் விஜயராஜ்.

1998ஆம் ஆண்டு அவரை வைத்து 13 எபிசோடுகள் எடுத்தோம். நண்பன் ஒருவனின் பொருளாதார உதவியுடன், என் தோழி நிவேதிதா இயக்கினார். ‘டி.எம்.எஸ் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்புடன், பெரும் முயற்சியால் தொடர் தயாரானது. “ஒரு சொல், அதனுடன் தொடர்புடைய கதை, ஐயா அதை விவரிப்பது, அந்தச் சொல்லைக் கொண்டு அவர் பாடிய பாடல்கள் பற்றிய விளக்கம், பிரபலம் ஒருவர் ஐயாவைப் பற்றிப் பேசுவது…இப்படித்தான் ஒவ்வொரு எபிசோடையும் வடிவமைத்திருந்தேன்” என்று சொல்கிறார். எடுத்து முடித்தபின் எந்த சேனலும் அதை ஒளிபரப்ப முன்வரவில்லை. இந்தச் சூழலில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு விஜயராஜுக்கு வந்தது. “டி.எம்.எஸ் ஐயாவுடன் சேர்ந்து அம்மாவைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து, அவர் கையாலேயே கோரிக்கைக் கடிதம் அனுப்பினேன். சில தடங்கல்களுக்குப் பின் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது” என்று சொல்கிறார் விஜயராஜ்.

30.06.1999 அன்று இருவரையும் சந்தித்தார் ஜெயலலிதா. “நான் உன்னை அழைக்கவில்லை, என் உயிரை அழைக்கிறேன்” என்ற பாடலுடன் அறைக்குள் நுழைந்த டி.எம்.எஸ்ஸைக் கண்டு அகமகிழ்ந்து போனார் ஜெயலலிதா. ஏற்கனவே எடுத்திருந்த ‘டி.எம்.எஸ் ஒரு சகாப்தம்’ என்ற 13 வாரத் தொடரை ஜெயா டி.வியில் ஒளிபரப்ப ஆவன செய்தார். அதோடு அல்லாமல், “அவர் பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு தகவலையும் தெளிவாகப் பதிவு செய்யுங்கள். எத்தனைத் தொடர்கள் வந்தாலும் இந்தத் தொடர் உலகத் தமிழர் மத்தியில் பெரிய அளவு பேசப்படும். வாழ்த்துகள்” என்று என்னை வாழ்த்தினார். அவரும் டி.எம்.எஸ் ஐயாவும் சேர்ந்து பாடும்போது எடுத்துக்கொண்ட, அவரிடமே இல்லாத புகைப்படத்தை நான் அன்பளிப்பாக வழங்கினேன். அதன்பின் ஏவி.எம்மில் பூஜை போடப்பட்டு, “இமயத்துடன்” தொடர் பணிகள் தொடங்கின. நிதியுதவியை சங்ககிரியைச் சேர்ந்த விஜயராஜின் நண்பர்கள் செய்தார்கள். அவ்வப்போது தடங்கல் இருக்கும், தொடர் முடிய நாளாகும் என்று சொல்லித்தான் வேலையை ஆரம்பித்தார் விஜயராஜ்.

அதற்குள், “நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்காக அவர் இறக்கும் வரை இவன் காத்திருக்கப் போகிறான், அதனால்தான் சீரியலை இழுத்துக்கொண்டே போகிறான்” என்று ஒரு புறம் விமர்சனங்கள், “டி.எம்.எஸ் எந்த ஒத்துழைப்பையும் தரமாட்டார்”, “டி.எம்.எஸ் எல்லாம் இன்று யார் பார்ப்பார்கள்… டிரெண்ட் மாறிவிட்டதே”, “உன்னுடன் படித்தவர்கள் எல்லாம் சீரியல் இயக்கி கோடிக்கணக்கில் சம்பாதித்து நன்றாக இருக்கிறார்கள், நீ டி.எம்.எஸ்ஸுக்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டாய்” என்று உறவினர்கள், நண்பர்களின் நையாண்டி ஒருபுறம் என்று ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படவில்லை விஜயராஜ். இந்த மனிதர்களைச் சமாளித்தது எதிர்காலத்தில் ஐம்பது படங்களை இயக்கும் துணிவைத் தந்துவிட்டது என்று சொல்கிறார். காரணம், டி.எம்.எஸ் மேலிருந்த அவரது தீராக் காதல்.

காதல் என்றால் நீங்களும் நானும் நினைப்பதுபோல மரத்தை சுற்றிப்பாடும் டூயட் காதல் அல்ல. அற்புதக் கலைஞன் ஒருவன் மேல் ரசிகன் கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தி, நேசம். தன் வாழ்க்கையின் சிறந்த 20 ஆண்டுகளை டி.எம்.எஸ் என்ற மகா கலைஞனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்திருக்கும் இந்தப் பண்புக்கு இன்னும் பெயர் கண்டுபிடிக்கப்படவில்லை!

80’ஸ் கிட்டான எனக்கு டி.எம்.எஸ் என்ற இசை மன்னன் பற்றிய பெரிய தேடலோ, அறிவோ இருந்ததில்லை. ஆனால், நேற்று பாட வந்த பாடகர் எல்லாம் தன் பெயருக்கு முன் அடைமொழியுடன் வலம்வரும்போது, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்ஸை வெறும் பாடகர் என்ற குப்பிக்குள் அடைத்து வைத்ததற்கு என்ன பின்புலம் இருந்துவிட முடியும்?

தன் மனத்தில் பட்டதை அந்தந்த இடத்திலேயே பட்டென்று உடைத்து எல்லோரிடமும் பேசியதால் அவருக்குக் கிடைத்ததுதான் என்ன? “ஆணவம் பிடித்தவன்”, “முன்கோபி”, “மண்டைக்கனம் பிடித்தவன்” என்ற சொல்லாடல்களை தன் தலையின் மேல் இன்னும் ஒரு கலைஞன் இறந்த பின்னும் சுமந்துகொண்டே இருக்கிறான் என்பது மனத்தைக் கனக்கச்செய்யவில்லையா?

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்த சௌராஷ்டிர வகுப்பை மீனாட்சி ஐயங்கார், வெங்கடம்மா மகனாகப் பிறந்து வாழ்ந்த சௌந்தரராஜன், அங்குள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் அர்ச்சராகவும் இருந்திருக்கிறார்; உறவினரிடம் சம்ஸ்கிருதமும் கற்றுக்கொண்டிருக்கிறார். பாட்டுக் கற்றுக் கொள்ள வசதியில்லாதவருக்கு சில நல்ல மனங்கள் உதவியிருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர் போன்ற குரலில் பாடுவதில் தேர்ந்தவர் சௌந்தரராஜன். அவர் படித்த மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில் தினமும் அசெம்பிளியில் பாடுவார். அதே பள்ளிக்கு அவரை அழைத்துச்சென்று, படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் விஜயராஜ்.

“அந்த நேரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேபிரியல், பங்குத் தந்தை ஆகியோர் தந்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. பள்ளியில் டி.எம்.எஸ் பிரேயரில் பங்கெடுத்துப் பேசினார்; அதைக் கேட்ட பாதிரியார், “நான் ஒரு கிறிஸ்துவனாக இருந்தாலும்கூட, நீங்கள் பாடிய உள்ளம் உருகுதையா பாடலுக்கு அடிமை” என்று சொல்லியிருக்கிறார். அவரது வீடு, பள்ளி, கோயில் என்று ஒரே நாளில் ஷூட்டிங் நடந்தது. அதுவரை எடுத்ததை சென்னை வந்து ஐயாவுக்குப் போட்டுக் காட்டினேன், அகமகிழ்ந்து போனார்” என்று விஜயராஜ் சொல்கிறார்.

“டி.வி.எஸ் குழுமத்தின் ரங்கநாதன், சௌந்தரராஜனுடன் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர். பின்னாளில் தன் பெயரை ரத்னம் என்று மாற்றிக்கொண்டார். அவரது மகளான அனிதா ரத்னத்தை அணுகி டி.எம்.எஸ்ஸை கோவையில் வந்து பேட்டி காண வேண்டும் என்று சொன்னேன். தந்தையின் நண்பராயிற்றே என்று பெரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். அவரே சொந்த செலவில் வந்து கோவையில் பேட்டி எடுத்துத் தந்தார். அவரது உதவியை மறக்கவே முடியாது” என்று சொல்கிறார்.

சென்னையிலிருந்து விஜயராஜ் அடுத்துப் படையெடுத்தது கோவைக்கு. 50 ஆண்டுகளாகப் பூட்டியிருந்த கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் டி.எம்.எஸ் தன் முதல் பாடலைப் பாடியுள்ளார். படப்பிடிப்பு நடத்த நாககுமார் என்ற நண்பர் மூலம், கோவை லக்ஷ்மி மில் மற்றும் சென்ட்ரல் ஸ்டூடியோ உரிமையாளரான சாந்தாராம் நாயுடுவின் அனுமதியை நாடினார் விஜயராஜ். இப்போது அங்கு ஸ்டூடியோவுக்கான எந்தத் தடயமும் இல்லை என்று சொல்பவர் டி.எம்.எஸ் 1946ஆம் ஆண்டு “ராதே நீ என்னைவிட்டு போகாதடி” என்ற பாடலை ‘கிருஷ்ண விஜயம்’ படத்துக்காக சென்ட்ரல் ஸ்டூடியோவின் ஓர் அறையில் பாடினார் என்று விளக்குகிறார். 14.1.1950 அன்று தான் அந்தப் படம் வெளியானது. போராடித்தான் இந்த இடத்துக்கு டி.எம்.எஸ் வந்தார் என்று சொல்கிறார் விஜயராஜ். 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டியிருந்த அந்த அறையின் கதவை உடைத்துத் தான் திறந்திருக்கிறார்கள். “உள்ளே எப்படி இருந்தது தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினார் விஜயராஜ்.

[டி.எம்.எஸ் பாடிய முதல் திரைப்பாடல் ‘ராதே நீ என்னைவிட்டு போகாதடி’, நன்றி: வேம்பார் மணிவண்ணன்](https://www.youtube.com/watch?v=1CIiTpPFsbc)

**தொடரும்…**

**படங்கள்: விஜயராஜ்**

**(இன்று மே 25 டி.எம். சௌந்தர்ராஜனின் நினைவுநாள்)**

**கட்டுரையாளர் குறிப்பு**

நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர்.எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதிவருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0