தயாரிப்பாளர்கள் சங்க முடிவும்: திருப்பூர் சுப்பிரமணியம் பதிலும்!

Published On:

| By Balaji

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று(01.07.2021) மாலை சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் பேசுகிற பொழுது

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி கூறிய அவர் சில வாரங்களில் திரையரங்குகளை திறப்பதற்கு மாநில அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் அந்த கால அவகாசத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திரையரங்குகள் அமல்படுத்த வேண்டும்” என கீழ்கண்ட முடிவுகளை அறிக்கையாக வழங்கினார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும் திரையரங்குகள் சம்பந்தபட்டதாக இருந்ததால், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவின் ஒவ்வொரு முடிவுக்கும் பதில் என்ன என்று நாம் கேட்டபோது….

தயாரிப்பாளர்கள் சங்க முடிவு.1

**தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் வழங்கும் முறையை கணினி மயமாக்கப்பட வேண்டும் என்கிற தயாரிப்பாளர்கள் சங்க முடிவு பற்றி**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என தெரியவில்லை தமிழ்நாட்டில் 95% தியேட்டர்களில் கம்ப்யூட்டர் மூலம்தான் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

த.சங்க முடிவு.2

**திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களின் உரிமை முழுவதும் சம்பந்தபட்ட தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கு தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்றபின்பு தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

தாராளமாக தயாரிப்பாளர்கள் அனுமதி கொடுத்தால் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இல்லையென்றால் டிக்கட் கவுண்டர் மூலம் கொடுக்கலாம். 150 டிக்கெட் விற்பனை என்பது 75 டிக்கெட் விற்பனையாகும் நஷ்டம் எங்களுக்கு இல்லை.

த.சங்க முடிவு.3

**ஆன்லைன் புக்கிங் மூலமாக வரக்கூடிய வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்குதர வேண்டும் என்பது பற்றி**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தியேட்டர் கட்டி, வேலைக்கு ஆட்களை வைத்து, ஆன்லைன் புக்கிங் ஏஜென்சியை நியமனம் செய்து தொழில் செய்கிறோம். நாங்கள் ஏன் அவர்களுக்கு பங்குதர வேண்டும்? ஓடிடி வருவாயில் தியேட்டர்களுக்கு பங்கு தருவார்களா? நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கை.

த.சங்க முடிவு.4

**தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஏரியாக்களில் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து சிண்டிகேட் முறையில் செயல்படுவதால் படங்களை திரையிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது, இதனால் சிண்டிகேட் முறையை கலைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள்சங்கம் எடுத்திருக்கிற முடிவு பற்றி**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

தியேட்டர் உரிமையாளர் யாருக்கு குத்தகைக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்கள் உரிமை, அதில் தயாரிப்பாளர்கள் சங்கம் எப்படி தலையிட முடியும், பைனான்ஸ் வாங்காமல் சொந்த பணத்தில் தான் தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினால் கேட்பார்களா?

த. சங்கமுடிவு.5

**கடந்த காலங்களில் இருந்தது போன்று HoldOver முறையை திரையரங்குகளில் கொண்டுவர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு பற்றி**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

சிறப்பு, இப்போது படம் வெளியான அன்று முதல் காட்சிக்கே ஆட்கள் வருவதில்லை இதனை அபசகுனமாக கருதாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்து ஒரு வாரம் படத்தை தியேட்டர்களில் ஓட்டி தருகிறோம்”HoldOver” முறை என்றால் தியேட்டரின் மொத்த சீட் எண்ணிக்கையில் 40% டிக்கெட் விற்பனை ஆகியிருக்க வேண்டும் இதன் அடிப்படையில் தியேட்டர்கள் செயல்பட தொடங்கினால் வெள்ளிக்கிழமை வெளிவரும்படங்கள் அன்றே கடைசி என்கிற நிலை ஏற்படும்.

பெரிய நடிகர்கள் படங்களுக்கே 40% டிக்கெட் விற்பனை என்பது போராட்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களை வளர்க்க நினைக்கிறதா அல்லது அழிக்க முயற்சிக்கிறதா என புரியவில்லையே.

த. சங்க முடிவு.6

**மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்கள் அவர்கள் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களுக்கு வாரம் ஒரு முறை கணக்கு பார்த்து காசோலையை அளிக்க வேண்டும்**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

தயாரிப்பாளர்கள் சங்கம் கி.பியில் இருக்கின்றதா கி.முவில் இருக்கின்றதா என தெரியவில்லை. படம் திரையிட அட்வான்ஸ் தொகை, அல்லது மினிமம் கேரண்டி தொகையை முதலிலேயே வாங்கியபின் வாரம் ஒருமுறை காசோலை எப்படி தருவது முன் தொகை வாங்காமல் படத்தை திரையிட்டால் இந்த நடைமுறை சாத்தியமானதுதான் . இப்போதும் சினிமா வாரத்தின் கடைசி நாள் படத்தின் மொத்த வசூல் தகவல்கள் படத்தை திரையிட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையில் 10% தான் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன.

த. சங்க முடிவு.7

**திரையரங்குகளில் சிறு முதலீட்டுப்படங்கள் வெளியிடும்போது மூன்று வகையான (I Class,II Class,III Class)டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்கிற தயாரிப்பாளர்கள் சங்க முடிவு பற்றி**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

தமிழகத்தில் 80% தியேட்டர்களில் இன்றளவும் அந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மொத்த சீட் எண்ணிக்கையே அதிகபட்சமாக 300 தான், இதில் அரசு ஆணைப்படி இரண்டு வகுப்பு டிக்கெட்டுகள் அமலில் உள்ளது முன்பெல்லாம் 1000ம் சீட் எண்ணிக்கை தியேட்டர்களில் இருந்தது. ஐந்து வகுப்புகள் கூட இருந்தது. தற்போது அப்படி சீட் எண்ணிக்கை இல்லை. தற்போதைய சினிமா ஒவ்வொரு நாளும் மாற்றங்களை சந்தித்து வருகிறது அதனை புரிந்துகொள்ள வேண்டும் தயாரிப்பாளர்கள் சங்கம்.

த.சங்க முடிவ.8

**தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை வெளியிடும்போது டிஜிட்டல்(VPF) கட்டணம் செலுத்துவதில்லை என்று அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது பற்றி,**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

இது தயாரிப்பாளர்கள் விருப்பம், உரிமை நாங்கள் என்ன சொல்லமுடியும்.

த.சங்க முடிவு.9

**டிஜிட்டல் மூலம் படங்களை திரையரங்கில் தயாரிப்பாளர்கள் படங்களை திரையிடுகிறார்கள். படங்களுக்கு இடையே கட்டண விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள், இந்த வருமானத்தை டிஜிட்டல் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கிட்டு கொள்கிறார்கள் எதிர்வரும் காலங்களில் தயாரிப்பாளர்களுக்கும் பங்குதர வேண்டும் என்கிற முடிவு பற்றி,**

*திருப்பூர் சுப்பிரமணியம்*

ஒரு திரைப்படத்தை தயாரிப்பாளர் மூன்றாம் நபருக்கு மாநில உரிமையை விற்பனை செய்துவிடுகிறார். அவர் ஏரியா அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் செய்கிறார், விநியோகஸ்தர் திரையரங்குகளுக்கு முன்பணம், அல்லது மினிமம் கேரண்டியில் படத்தை திரையிட வழங்குகிறார்.

இதில் எல்லோருமே முதலீட்டாளர்கள் தான், படத்தை விற்பனை செய்தபின் அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தயாரிப்பாளர் பங்கு கேட்க முடியாது. எந்த ஒரு தொழிலிலும் இந்த நடைமுறை இல்லை, சினிமா வியாபாரம் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் இப்படி முடிவு எடுக்க மாட்டார்கள்.

இதையெல்லாம் விட்டுவிடுவோம், எங்கள் திரையரங்கில் திரையிடப்படும் படங்களை ஓடிடி, தொலைக்காட்சியில் திரையிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் எங்களுக்கு பங்கு தருவார்களா அல்லது தொலைக்காட்சியில் படத்தை ஒலிபரப்பும்போது இடம் பெறும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பங்கு கேட்க முடியுமா தயாரிப்பாளர்கள் ?” என்று கேள்வி எழுப்பினார்.

**-இராமானுஜம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share