தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த 96 படம் பெரிய ஹிட்டானது. தொடர்ந்து, ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்தார். அதன்பிறகு, எக்கச்சக்கப் படங்கள் ரிலீஸூக்கு லைன் கட்டி நிற்கிறது. தற்பொழுது, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி உள்ளிட்ட நாயகி முக்கியத்துவமுள்ள படங்கள் த்ரிஷா நடிப்பில் தயாராக இருக்கிறது. இந்த நான்கு படங்களுமே தயாராகிவிட்ட நிலையிலும் ரிலீஸாவதில் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு சிக்கல் இருப்பதால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இதில், ஒரு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
4 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் திருஞானம் இயக்கியுள்ள படம் ‘பரமபத விளையாட்டு’. த்ரிஷாவுடன் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சொல்லப் போனால், கடந்த வருடம் பிப்ரவரி 28க்கு வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், இறுதி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இந்தப் படக்குழுவினருக்கும் த்ரிஷாவுக்கு இடையே சில உரசல்கள் இருந்துவந்தன. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட த்ரிஷா வராமல் இருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், படத்துக்கு இருந்த சிக்கல்களை சரி செய்து, படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. ஷாக்கிங் செய்தி என்னவென்றால், தியேட்டரில் படம் வெளியாகப் போவதில்லை. நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்திருக்கிறது. ஹாட்ஸ்டாரிடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருப்பதாகத் தகவல். நமக்குக் கிடைத்த தகவல்படி, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
நீண்ட நாளாக வெளியாகாமல் கிடப்பில் கிடந்த எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. தற்பொழுது, த்ரிஷாவின் பரமபத விளையாட்டு படத்தின் ரூட் க்ளியராகிவிட்டது. த்ரிஷா நடித்து முடித்த மூன்று படங்கள் இன்னும் மீதமிருக்கிறது. அதுவும் விரைவில் வெளியாகும் என நம்பலாம். இப்படி, புதைகுழியில் கிடக்கும் ஒவ்வொரு படமும் மேலேறி வந்தால் தமிழ் சினிமா செழிக்கும்.
– ஆதினி
�,