தமிழ் மண்ணின் மைந்தனாகப் பிறந்த பலருக்கும் கூட ஆங்கிலக் கலப்பு துளியும் இன்றி தமிழில் பேசுவது கடினமான ஒன்றாகவே உள்ளது.
சிலருக்கு நன்கு தமிழ் பேசத் தெரிந்திருந்தாலும், ஆங்கிலம் பேசுவது தான் பெருமை என்று நினைக்கிறார்கள். அதனை ஒரு கலாச்சார மாற்றமாகவே ஏற்றுக் கொண்டவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். அதே நேரத்தில், தமிழாலும், தமிழர்களாலும் கவரப்பட்டு சில வெளிநாட்டினர் நம் மண்ணில் வாழ ஆசைப்படுகின்றனர். நமது உணவு, உடை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் அவர்களைக் கவர்ந்திருந்தாலும், முதலில் ஈர்த்தது நம் தமிழ் மொழியின் அருமை தான் என்கிறார்கள்.
அவ்வாறு தமிழர் ஒருவரைத் திருமணம் செய்து, தமிழ்நாட்டு மருமகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சமந்தா கண்ணன் டிக் டாக்கில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழர்கள் பலருக்கும் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று ‘ழ’, ‘ல’, ‘ள’ ஆகிய எழுத்துக்களை வேறுபாடு தெரியும் விதத்தில் மிகச் சரியாக உச்சரிப்பது. உதாரணமாக ‘விழை’, ‘விலை’, ‘விளை’ ஆகிய மூன்று சொற்களையும் ஒரே ஒலி எழும் விதத்தில் பலரும் பேசுவதைப் பார்த்திருப்போம். அதைத் திருத்தமாகப் பேச இயலும் என்றாலும் பலரும் முயற்சி செய்ய முற்பட்டிருக்க மாட்டார்கள்.
@samanthakannan wish he would pronounce ழ் 😬
ஆனால் ‘குளம்பு’ என்று தவறாகக் கூறும் தன் கணவருக்கு, ‘குழம்பு’ என்று சரியாக உச்சரிக்க சமந்தா கண்ணன் கற்றுக் கொடுக்கிறார். ஒரு அமெரிக்க மகள் தமிழை முறையாகக் கற்றுக்கொண்டு தன் தமிழ் பேசும் கணவரின் மொழிப் பிழையைத் திருத்தும் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
@samanthakannan 🙈
அதற்கு ஒரு படி மேலே சென்று, ‘கிழட்டு கிழவன், வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்’ என்று பலரும் உச்சரிக்கத் தடுமாறும் தமிழ் சொற்றொடரை சரியாக உச்சரித்து ஆச்சரியமூட்டுகிறார். டிக் டாக்கில் இவர் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்கள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. யாரேனும் இவரது வீடியோவைப் பாராட்டி, ‘சூப்பர்’ என்று ஆங்கிலத்தில் பதிவிட்டால் அதற்கும் நன்றி என்றே பதில் கூறி வியக்க வைக்கிறார். நம்மிடையே பலரும் தமிழ் பேச வராது என்று கூறுவதைப் பெருமையாகக் கருதும் போது, இத்தகைய சில வெளிநாட்டினர் தமிழின் அருமையையும், தமிழரின் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றி வருகின்றனர்.
**-டிக் டாக் யூஸர்**�,”