கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு தேடி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் இருக்கிறோம்.
வேலைக்கு செல்ல முடியாமல், அன்றாட உணவுக்குக் கூட பணம் ஈட்ட வழியில்லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எப்போது வீட்டை விட்டு வெளியே வருவது? எப்போது வீதியில் இறங்கி நடப்பது? எப்போது நல்ல காற்றை சுவாசிப்பது? என்று பலரும் பலரும் ஏங்கி வருகின்றனர்.
வீட்டை விட்டு வெளியே வந்தாலே போதும் என்று சிலர் காத்துக் கொண்டிருக்க, நம்மைப் போன்ற சில மக்கள் தங்கள் வீடுகளைத் தேடி பல நாட்களாக சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று எவ்வித பாதுகாப்பும் இன்றி உச்சி வெயிலில் பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் தங்கள் வீடுகளைத் தேடி தார் சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் இரு வேறு பட்ட மக்கள், இரு வேறு விதமான வாழ்க்கை. அவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை கார்ட்டூன் வீடியோ மூலம் விளக்கி டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளனர்.
@wizzuprudhvi today’s sad relaity😢😢😢😢😢. plz help to migrated people’s.##callme_prudhvi ##thanksforurlove ##keepsupporting
வீட்டில் இருக்கும் நபர் படுக்கையில் உறங்க, சிறு குழந்தையை நெஞ்சில் சாய வைத்து மனைவியுடன் சாலை ஓரத்தில் படுத்திருக்கிறார் அப்பாவி தொழிலாளி. உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வீட்டிலேயே சிலர் உடற்பயிற்சி செய்யும் போது, இங்கே இவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
லாக் டவுனில் பொழுதைப் போக்க விதவிதமாக உணவை சமைத்து, அதனைப் பெருமையாக ஃபோட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் யாரோ தானம் செய்த உணவையும், பிஸ்கெட்களையும் உண்டு அடுத்த பல மணி நேரம் நடப்பதற்கான சக்தியை வீட்டை நோக்கி நடக்கும் மக்கள் தேடி வருகிறார்கள்.
இங்கே மிச்சமான உணவு பொருட்கள் குப்பையில் கொட்டப்படும் போது, அங்கே சிலர் பசி மிகுதியால் குப்பைக்குள் உணவைத் தேட வேண்டிய இழிநிலைக்கு சென்றுள்ளனர். இங்கே வெயில் சுட்டெரிக்கிறது என்று ஏசியின் குளிரை மேலும் குறைக்க, அங்கே சாலை ஓரத்தில் மிச்சமிருக்கும் மரத்தின் அடியில் சற்று இளைப்பாற மக்கள் வருகின்றனர்.
இங்கே மக்கள் வீட்டில் குளிக்க, அங்கே அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்டர்நெட் சரியாக கனெக்ட் ஆகவில்லையே என்று இங்கே மக்கள் வருத்தப்பட, அங்கே கையில் இருந்த மொத்த காசு தீர்ந்து விட்டதே என்று மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் படுத்தும், டிவி பார்த்தும், டிக் டாக் செய்தும் சிலர் நேரத்தைக் கழிக்கும் போதும் எல்லாம் அங்கே மக்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்த வீடியோ டிக் டாக்கில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்த பயத்தை விட வீட்டை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை கண்கலங்க வைக்கிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”