ஒரு சில இயக்குநர்கள் அத்தி பூத்தாற் போல் எப்போதாவது படத்தைக் கொடுப்பார்கள். ஆனால், அந்த இயக்குநரின் படத்துக்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். அப்படியான ஒருவர் தியாகராஜன் குமாரராஜா.
2010ல் எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோலிவுட் ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவமாக அமைந்தது ஆரண்ய காண்டம். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போனார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. பத்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஆச்சரியத்தைக் கொண்டுவந்தார். அதுதான் `சூப்பர் டீலக்ஸ்’.
விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா என யோசித்துப் பார்க்க முடியாத நடிகர்களை ஒன்றிணைத்து,யோசிக்கவே யோசிக்கும் காட்சிகளை வடிவமைத்து வேறொரு கோணத்தில் சினிமாவை சூப்பர் டீலக்ஸில் காட்டினார்.
கதைகளிலும் , திரைக்கதைகளிலும் புதிய யுக்தியைக் கையாளும் இவரின் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. இவர், அடுத்ததாக ஒரு வரலாற்று கதையை படமாக்க இருப்பதாக ஒரு தகவல்.
இந்த படத்துக்கான கதை எழுதும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். விரைவிலேயே, அந்த கதை பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் டீலக்ஸ் ரிலீஸானதும் தியாகராஜன் குமாரராஜாவின் திட்டமே வேறொன்றாக இருந்தது. படத்தை வெளியிட்ட கையோடு பைக்கில் உலகம் முழுவதும் டிராவல் செய்ய இருந்தாராம். அதற்காக, நெருங்கிய இயக்குநரின் உதவியோடு விலைமதிப்புள்ள பைக் ஒன்றையும் வாங்கியும் இருக்கிறார். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் அந்த டிராவல் இன்னும் கைகூடவில்லை. அந்த டிராவலுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை துவங்க இருந்தார் என்று சொல்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
தற்பொழுது, வீட்டை விட்டே வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதால், முதலில் ஒருபடத்தை முடிக்கலாம் என கதையெழுதும் பணியில் இறங்கியிருக்கிறார்.
**- ஆதினி**
.�,