மூன்றாவது டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு – டிக்கெட் விற்பனை முடிந்தது!

Published On:

| By Balaji

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக விற்று தீர்ந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 1. விராட் கோலி, 2. ரோஹித் சர்மா, 3. மயங்க் அகர்வால், 4. ஷுப்மான் கில், 5. புஜாரா, 6. ரஹானே, 7. கே.எல்.ராகுல், 8. ஹர்திக் பாண்ட்யா, 9. ரிஷப் பண்ட், 10. சாஹா, 11. அஷ்வின், 12. குல்தீப் யாதவ், 13. அக்ஸர் படேல், 14. வாஷிங்டன் சுந்தர், 15. இஷாந்த் சர்மா, 16. பும்ரா, 17 முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணி சார்பில் விளையாட இருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்தப் போட்டி பகல்-இரவு (பிங்க் பந்து) ஆட்டமாக நடைபெறுகிறது. 1 லட்சத்து 10,000 பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில் 50 சதவிகித இருக்கைகளுக்குரிய டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி டிக்கெட் விற்பனை ஆன்-லைன் மூலம் நடைபெற்றது.

2014ஆம்ஆண்டுக்குப் பிறகு இங்கு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பதால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம்காட்டினார்கள். இதனால் ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக விற்று தீர்ந்தன.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘ஆமதாபாத்தில் நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு இங்கு நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். மக்கள் இயல்புநிலை திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க முடியுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share