தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.
‘தி லெஜண்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். ஜேடி – ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை 7.30 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எந்திரன் பாகம் 2’இல் சிட்டி ரோபோவாக எந்திர மனிதன் ஒன்றை நடமாடவிட்டிருப்பார் இயக்குநர் ஷங்கர். அதேபோன்ற உருவ அமைப்பை பார்ப்பவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் தி லெஜண்ட் படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் சரவணன்.
‘உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க…’ என்று தொடங்குகிறது டிரெய்லர்.
ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்தப் படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க, அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது டிரெய்லரின் முதல் பாதி.
இரண்டாம் பாதியில் நாசரின் ஊக்கப்படுத்துதலுக்குப் பிறகு ‘எடுக்குறேன் சார்… அவதாரம் எடுக்குறேன்’ என்ற வசனத்தோடு சாஃப்ட் சைன்டிஸ்ட் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ‘இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்’ என்று அடிக்கிற அடியில், ’சரவணன் The most Dangerous Scientist’ என்று வில்லன்களைக் கதறவிடுகிறார். சேரை தூக்கி அடிக்கும் வேகத்தைப் பார்த்து ’லெஜண்ட் சார் நீங்க’ என்று பாராட்டைப் பெறுவதுடன், ‘இவங்க எல்லாரும் என்மேல வெச்சிருக்க நம்பிக்கைதான் என்னோட பலம். அந்த நம்பிக்கை ஒருநாளும் வீண் போகாது’ என்று எம்.ஜி.ஆர் படப்பாணியில் முடிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
**-இராமானுஜம்**