gஏப்ரல் 9இல் தி லெஜெண்ட் பாடல் வெளியீடு!

Published On:

| By admin

தமிழ்சினிமா ஆச்சர்ய பார்வையுடன் பார்த்து வருவது தி லெஜெண்ட் படம் சம்பந்தமான தகவல்களைதான். ஏனென்றால் இந்த படத்தின் கதாநாயகன், தயாரிப்பாளர் எல்லாம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் என்பதால்தான்.

தான் உண்டு தனது வியாபாரம் உண்டு என பயணித்து வந்த சரவணன், தனது கடை தொடர்பான விளம்பரங்களில் திடீர் என நடிக்க தொடங்கினார். அவரது கடை தொடர்பான விளம்பர படங்களை இயக்கி வந்த ஜெடி – ஜெர்ரி இரட்டை இயக்குநர்கள் கொடுத்த அழுத்தம், நம்பிக்கை காரணமாக பிரபலமான முன்னணி நடிகைகள் நடித்த தனது கடை விளம்பரத்தில் மைய புள்ளியாக இடம்பெற்றார்.

தொடக்கத்தில் கிண்டல், கேலிக்கு உள்ளான சரவணனின் விளம்பரபட நடிப்பு பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு பிடித்துப்போனது. அதன் விளைவாக தற்போது இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சரவணன்.

இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் சரவணன். நாயகியாக மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்துள்ளார்.

ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் உள்ளிட்டோர் நடனம் அமைக்க கனல் அரசு ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது

’எந்திரன் 2.0’ ரஜினியை நினைவூட்டும் பின்னணியில் ஜேம்ஸ்பாண்ட்டைப் போன்ற காஸ்டியூமில் சரவணன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 9 ஆம் தேதி(இன்று) வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இப்பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பீஸ்ட் டிக்கெட் விற்பனை, கேஜிஎப் படத்தின் முன்பதிவு வேகம், எந்த படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளது என்கிற விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் அனைவரது கவனமும் லெஜண்ட் சரவணன் படத்தின் மீது திரும்பியுள்ளது

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share