நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017இல் வெளியான தெலுங்குப் படம் ‘நின்னுக் கோரி’. சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்தப் படம் பெரிய ஹிட். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது.
தமிழ் வெர்ஷனில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ‘தள்ளிப் போகாதே’ எனும் பெயரில் படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன், சமீபத்தில் ஒரு படத்தைத் தொடங்கினார். மீண்டும் ஒரு ரீமேக் படம்தான் அது. சென்ற முறை தெலுங்கு சினிமாவைத் தேர்ந்தெடுத்தவர், இந்த முறை மலையாளம் பக்கம் ஒதுங்கினார்.
சமீபகாலமாக மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற சில படங்கள் தமிழில் ரீமேக் ஆகிவருகின்றன. அப்படி, மலையாளத்தில் பெரிய பாராட்டுகளைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் பணியைத் தொடங்கினார் ஆர்.கண்ணன்.
மலையாளத்தில் சுராஜ், நிமிஷா சஜயன் நடிப்பில் நீ ஸ்ட்ரீம் எனும் ஓடிடியில் சமீபத்தில் வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் வெற்றிக்கு காரணம் படத்தின் கரு தான்.
மில்லினிய யுகம் இது. வாழ்க்கையில் படித்துச் சாதிக்க நினைக்கும் பெண் ஒருவருக்குத் திருமணமாகிறது. திருமணத்துக்குப் பிறகு, படித்த கல்வியை, நண்பர்களை, கனவை மறந்துவிட்டு அடுப்படிக்குள் தள்ளப்படுகிறார். காலை முதல் இரவு வரை அடுப்படிக்குள் சமையல், இரவு கணவரின் ஆசையை நிறைவேற்றுதல் என இருக்கும் பழைமைவாத கட்டுக்குள்ளிருந்து அந்தப் பெண் எப்படி வெளியேறுகிறார் என்பதே கதை.
தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் கண்ணன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. படத்தில் நிமிஷா ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கணவர் சுராஜ் ரோலில் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. 20 – 25 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டது படக்குழு. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என பெரும் விவாதமே படக்குழுவுக்குள் நடந்து வருகிறதாம். புரட்சிகரமான ஒரு பெயராக இருக்க வேண்டும் என படக்குழு விரும்புகிறதாம். அதன்படி, படத்துக்கு ‘பராசக்தி’ எனப் பெயர் வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள்.
சமூக நீதியைப் பேசி மூட நம்பிக்கைகளை, பழைமைவாதத்தை அடித்து நொறுக்கிய படம் பராசக்தி. சிவாஜி நடிகராக அறிமுகமான படம். அனல் பறக்கும் வசனங்களைக் கலைஞர் கருணாநிதி எழுதிய படம். அதனால், பராசக்தி பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு நினைத்திருக்கிறது.
படத்தின் பெயருக்கான உரிமையை முறைப்படி வாங்க வேண்டுமென்பதால், தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்மிடம் பேசியிருக்கிறது. ஆனால், படத்தின் தலைப்புக்கான உரிமையைத் தர முடியாது என்று கூறிவிட்டதாம். வேறு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து வருகிறதாம் படக்குழு.
**- ஆதினி**
�,