�
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் தற்போது இயங்கிக் கொண்டிருந்தாலும் அவற்றில் 50%அளவுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில் ஒரு சீட் விட்டு அடுத்த சீட்டில்தான் ரசிகர்கள் அமர வேண்டும் என்ற நிபந்தனைக்காக இந்த விதிமுறையை தமிழக அரசு விதித்திருந்தது. தற்போது அந்த விதிமுறையை முற்றிலும் நீக்கியிருக்கிறது.
இது தொடர்பாக நேற்று மாலை தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தமிழகம் முழுவதிலும் உள்ள சினிமா தியேட்டர்களில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரங்கத்திற்குள் நடைபெறும் பல்வேறுவிதமாக நிகழ்ச்சிகளுக்கும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதியளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி வருவதால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்பதாலும் தமிழ்த் திரையுலகத்தினரின் வற்புறுத்தலால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இருந்தாலும் வரும் தீபாவளியன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,