தங்கர் பச்சான் மகனின் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’!

entertainment

அழகி படம் மூலம் மனித உணர்வுகளையும், சொல்ல மறந்த கதை படம் மூலம் குடும்ப உறவுகளையும், பள்ளிக்கூடம் படத்தின் மூலம் கிராமப் பள்ளிகளின் முக்கியத்துவத்தையும் திரைமொழியில் இயக்கியவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.
வழக்கமான வணிக, மசாலா சினிமாவில் இருந்து வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா இயக்குநர்களில் தனித்து கவனம் பெற்றவர் தங்கர் பச்சான். கடைசியாக இவர் 2017ஆம் ஆண்டு பிரபு தேவா நடித்த ’களவாடிய பொழுதுகள்’ படத்தை இயக்கினார். வணிகரீதியாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
அதைத்தொடர்ந்து தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக
அறிமுகப்படுத்த ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை 2019இல் தொடங்கி தற்போது இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் படத்துக்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
டக்கு முக்கு டிக்கு தாளம் தலைப்பு பாடலை தங்கர் பச்சானே எழுதியுள்ளார். ‘டக்கேய்… முக்கேய்… டிக்கு… டிக்கு.. டக்கு முக்கு டிக்கு தாளம்’ என ஒலிக்கும் தேவாவின் அதிரவைக்கும் குரலும் தரண்குமாரின் இசையும் குதூகலமூட்டுகிறது. பாடலுக்கு ஏற்ப, நடிகர் விஜித் பச்சானின் கேஷுவலான நடனமும் கவனம் ஈர்க்கின்றன. பாடல் படமாக்கப்பட்ட காட்சிகளையும் பாடல் பதிவு காட்சிகளையும் ஒன்றாக இணைத்து தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
விஜித் பச்சானுடன் மிலனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனீஸ் காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘அழகி’ படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனாலும் படத்தை இன்னும் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில், ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தப் படம் குறித்து ஏற்கனவே தங்கர் பச்சான் கூறியபோது, “இது என்னோட படம் மாதிரி இருக்காது. சொல்லக்கூச்சமா தான் இருக்கு 13 நாட்கள் வெறும் சண்டைக்காட்சி மட்டும் எடுத்திருக்கேன். போலீஸே என் படங்கள்ல வந்ததில்ல. ஆனா, இந்தப் படத்துல போலீஸ், கொலை, போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கு.
ஆனால், அதில் ஒரு தனித்துவம் இருக்கும். எடுக்கப்படும் முறைனு ஒன்ணு இருக்கு. அதில், தங்கர் பச்சான் முத்திரை இருக்கும் .நம்ப மட்டும் ஏன் நடந்ததையே எடுக்கணும்னு ஆரம்பிச்சதுதான் இந்தப் படம். ஒரே ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே? அதுக்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம்னு பேர் வச்சேன். எனக்கென்ன வேற தலைப்பு வைக்க தெரியாதா. இனி நம்பள வேற யாரும் கேள்வியே கேட்கக் கூடாதுன்னு தான் இந்த தலைப்பையே வச்சேன். இது வேற மாதிரி படம்ங்கறத மக்கள் கிட்ட பதிவு பண்றேன்.
மக்களை ஏமாத்திடக் கூடாதுன்னு இத முன்கூட்டியே தெரியப்படுத்திக்கறேன். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பொழுதுபோக்கு சித்திரம்” எனக் கூறியுள்ளார்.
வணிகரீதியான மசாலா திரைப்படங்களை கடுமையாக விமர்சித்து வந்த தங்கர் பச்சான் தன் மகனை கதாநாயகனாக்க மசாலா சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது
**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.