லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 64 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் அடுத்த படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவரும் இந்தப் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக், சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வந்தது. படத்தில் இடம்பெறும் மற்ற காட்சிகளுடன் சில பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்திருந்தனர். அவற்றில் இருக்கும் விஜய்யின் புதிய லுக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் கர்நாடகாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு விஜய் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, தளபதி 64 திரைப்படத்தின் அதிகாரபூர்வ பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் என்னும் பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தளபதி 64இன் ஃபர்ஸ்ட் லுக் ரெடியாகிவிட்டதாகவும், விஜய்யின் புதிய லுக் ஒரு சஸ்பென்ஸ் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டும் டேக் செய்யப்பட்டுள்ளது.
#ThalapathyVijay‘s New Look Get Ready For The Suspense Treat As #Thalapathy64 First-look !???????????? @agscinemasOffl
— XB Film Creators (@XbFilm) December 23, 2019
இந்தச் செய்திக்காகக் காத்திருந்த ரசிகர்களும் இதைப் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவல் பொய்யானது என்றும் போலியான ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. இதில் டேக் செய்யப்பட்டிருக்கும் ஏஜிஎஸ் சினிமாஸ் என்னும் ட்விட்டர் கணக்கும் போலியானது.
�,”