‘தளபதி 66’ முதல் பார்வை எப்போது வெளியீடு?

Published On:

| By admin

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி66’ படத்தின் முதல் பார்வை அவரது பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வந்துள்ளது.

சமீப காலமாகவே நடிகர் விஜய் இளம் தலைமுறை இயக்குநர்களுடன் கைக்கோர்ப்பது, புது விதமான கதைகளை முயற்சி செய்து பார்ப்பது என்று தனது சினிமா பயணத்தில் அடுத்த அத்தியாயத்தில் உள்ளார். அந்த வகையில் இளம் இயக்குநர்கள் இயக்கிய ‘தெறி’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ என அட்லி, நெல்சன், லோகேஷ் கனகாராஜூடன் படங்கள் கொடுத்துள்ளார்.

அந்த வரிசையில், தற்போது தன்னுடைய 66வது படத்தில் நடித்து வருகிறார். தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இந்த படத்தை இயக்குகிறார். தில் ராஜூ படத்தை தயாரிக்கிறார். நடிகர் விஜய்யின் ஆரம்ப கால படங்களான, ‘காதலுக்கு மரியாதை’, ‘பூவே உனக்காக’ போல குடும்ப ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது.

நாயகியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் முடிவடைந்து விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வருகிறது. ஆனால், இது குறித்து இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

நடிகர் விஜய்யின் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாள் இந்த மாதம் 22 ஆம் தேதி வர இருக்கிறது. இதனை ஒட்டி, படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் ‘விக்ரம்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்திய விருது விழா ஒன்றில் நடிகர் விஜய்யின் 67வது படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளன்று 66வது படத்தின் தலைப்பு வெளியாகும் என்பதால் 67 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதற்கு பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share