ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி. இது யாருக்கு பொருந்தி போகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளுக்கு பொருந்திப் போகும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அடுத்த வேளை சாப்பாடு பற்றி கவலைப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு நாளும் வீணாகிப்போகிறதே என்று கவலைப்பட்டவர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கலைஞர்கள்.
படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்குவது அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது என்பதால் சில்லறைக்காக சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பினார்கள். கலைஞர்கள் வந்தது வரை லாபம் என்கிற கணக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளர்களாக பணியாற்ற தொடங்கினார்கள் அப்படியொரு நிகழ்ச்சிதான்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப்.
இந்நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தார்கள். திடீரென்று தெலுங்கில் தமன்னா நீக்கப்பட்டு அனுசுயா என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
எதற்காக தமன்னா நீக்கப்பட்டார் என்ற தகவல் தெரியாமலேயே இருந்தது. தற்போது தமன்னாவின் வக்கீல் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,
மாஸ்டர் செஃப்’ தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தயாரிப்பு தரப்பு தொடர்ந்து சம்பளம் தராமல், தொழில் ரீதியாக ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலும் தமன்னா தனது மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்துத் தர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.
ஆனால் திடீரென்று தயாரிப்பு தரப்பு அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டது என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமன்னாவின் வக்கீல் தரப்பு தெரிவித்துள்ளது.
** – அம்பலவாணன் **
�,”