தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஹிட் பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் 90வது தயாரிப்பாக உருவாகியிருக்கும் படம் ‘களத்தில் சந்திப்போம்’.
ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை என்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இரண்டு ஹீரோ கதையம்சத்துடன் ஆக்ஷன் காமெடியுடன் படம் உருவாகியிருக்கிறது.
கதைப்படி இரண்டு நண்பர்களான ஜீவா & அருள்நிதி இருவருக்கும் இடையிலான நட்பினை மையமாகக் கொண்டே இந்தப் படம் உருவாகியிருக்கிறது. கொரோனாவுக்கு முன்பாக சென்னை, தென்காசி, காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பை எடுத்துமுடித்தது படக்குழு. கொரோனாவினால் ரிலீஸாக முடியாமல் தள்ளிப் போன படங்களில் இதுவும் ஒன்று.
மாஸ்டர் ரிலீஸ் தான் தமிழ் திரையுலகிற்குக் கிடைத்திருக்கும் புதிய எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. மாஸ்டர் ரிலீஸூக்கு கிடைத்த வரவேற்பினால் திரையரங்கில் வெளியாக பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறது. அப்படி, சில தினங்களுக்கு முன்பு ‘களத்தில் சந்திப்போம்’ படமானது வருகிற ஜனவரி 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு. அதாவது, மாஸ்டர் ரிலீஸைத் தொடர்ந்து இரண்டாவதாக திரையரங்கில் இப்படம் வெளியாக இருந்தது.
மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், இந்த வார வெள்ளிக்கிழமைக்கு எந்தப் புதிய படமும் வெளியாகவில்லை. படத்துக்கு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சிட்டி ஏரியாக்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்கு கலெக்ஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், களத்தில் சந்திப்போம் படத்துக்கு திரையரங்கம் கிடைப்பதில் சிக்கலாக இருக்கிறதாம். திரையரங்கங்கள் மாஸ்டரில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதனால், வெளியானாலும் குறைவான தியேட்டர்களும், காட்சிகளும் மட்டுமே கிடைக்கும் என்ற சிக்கலை களத்தில் சந்திப்போம் எதிர்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.
ஆகையால், எப்படியும் சொன்ன தேதியில் களத்தில் சந்திப்போம் வெளியாகாது என்றே சொல்லப்படுகிறது. இன்னும் சில வாரம் தள்ளிப் போய்தான் களத்தில் சந்திக்க வேண்டும் போலும். காத்திருப்போம்.
**ஆதினி**�,”