Uஅழகின் அளவுகோல் சிகப்பா? தமன்னா

Published On:

| By Balaji

தோலின் நிறம் ஒருவரின் அழகை நிர்ணயிப்பதாக கூறப்படும் கருத்துருவாக்கத்திற்கு நடிகை தமன்னா பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு எதிரான போராட்டங்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற பிரச்சாரத்தை உலகெங்கும் எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த ஹேஷ்டேக் நிறம் குறித்தும் அழகு குறித்தும் இதுவரை பொதுபுத்தியில் இருந்த கற்பிதங்களை உடைத்து வருகிறது. அண்மையில் ஃபேர் அண்ட் லவ்லி என்ற அழகு சாதன நிறுவனம், இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கூட ‘க்ளோ & லவ்லி’ என மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெகுஜன மக்களின் கலையான சினிமாவிலும் அழகு என்பதன் நேரடியான அர்த்தமாக சிகப்பு நிறம் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தமன்னா இது குறித்து கேள்வி எழுந்த போது தன் மனதில் உள்ள பதிலை பகிர்ந்துள்ளார். பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிரச்சாரத்தின் போது அழகு சாதன விளம்பரத்தில் நடித்ததற்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகைகளுள் தமன்னாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா குறித்து பெரும்பாலான ஊடகங்களும், அவரை அடையாளப்படுத்தும் விதமாக ‘மில்கி பியூட்டி’ போன்ற சொற்களையே பயன்படுத்துகிறார்கள். அதேசமயம் அழகிற்கான ஒரு அளவுகோலாக நிறம் கருதப்படுவதை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்து வருவதை தமன்னா எவ்வாறு பார்க்கிறார் என நேர்காணலில் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமன்னா,நிச்சயமாக இல்லை. இது நிச்சயமாக அழகுக்கான அளவுகோல் இல்லை. ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் நடித்ததன் மூலம் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால் அந்த நேரத்தில் நான் ஒரு மாடலாக இருந்தேன். 15 வயது குழந்தையாக இருந்தேன். நான் அந்த அழகுசாதன பிராண்டை அங்கீகரிக்கவில்லை, ஆனால் நான் ஒரு மாடல், அவ்வளவே. தற்போது அந்தப் படங்களை எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் அதைப் பற்றி எப்படி நான் உணராமல் இருந்தேன் என்பதைக் காட்ட அவர்கள் முயற்சி செய்தார்கள். ஒரு பொது நபராகவும் பிரபலமாகவும் நான் ஒரு ‘ஃபேர்னஸ்’ கிரீம்க்கு ஊக்கம் அளிக்கவில்லை. நான் திறந்த மனதுடன் உண்மையின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்.

ரசிகர்களிடமிருந்து வரும் எல்லா அன்பும் அவர்கள் என்னை ‘மில்கி பியூட்டி’ என்று அழைப்பதும் ஒரு காரணம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது என்னுடன் இணைந்த ஒன்றல்ல. இதைப் பற்றி பேச இது மிக முக்கியமான நேரம். அழகுக்கும் நிறத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவரை சிகப்பானவர் என்று சொல்வது கூட ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறியே. நிறம் என்பது எதற்கும் அளவுகோள் அல்ல” எனக் கூறியுள்ளார் தமன்னா.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share