Pடி20 உலகக் கோப்பை: வெல்வது யார்?

Published On:

| By Balaji

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதன் இறுதிப்போட்டி துபாயில் இன்று (நவம்பர் 14) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா, நியூசிலாந்தா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2010இல் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

ஐந்து தடவை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக டி20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தது.

நியூசிலாந்து அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2015இல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது.

இதற்கு இன்று இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது. ஆஸ்திரேலியாவை போலவே நியூசிலாந்தும் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்த ஆண்டு அரையிறுதி போட்டியில் விளையாடக்கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.

2009ஆம் ஆண்டு – பாகிஸ்தான், 2010ஆம் ஆண்டு – இங்கிலாந்து, 2012ஆம் ஆண்டு – மேற்கிந்திய தீவுகள், 2014ஆம் ஆண்டு – இலங்கை, 2016ஆம் ஆண்டு – மேற்கிந்திய தீவுகள் அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இந்த ஆண்டு கோப்பை வெல்வது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா?

இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share