டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

entertainment

இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று (அக்டோபர் 17) தொடங்குகிறது.

2007ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், மூன்றாவது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் ஐபிஎல் போட்டியை அடுத்து, இந்தப் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (அக்டோபர் 17) தொடங்குகிறது. இதில் ஓமனில் ஆறு லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

முதல் சுற்றில் பங்கேற்கும் எட்டு அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வருகிற 24ஆம் தேதி துபாயில் சந்திக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் ஐக்கிய அமீரகத்தில்தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருப்பதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைமையும், மைதானத்தின் தன்மையும் பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு இப்போது அத்துப்படி. ஆக, ஐபிஎல் அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு அனுகூலமாக அமையும்.

2016ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 2007ஆம் ஆண்டு டோனி தலைமையில் உலகக் கோப்பைக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் படையெடுத்துள்ளது. டோனி ஓய்வு பெற்றுவிட்டாலும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகும்.

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன் – பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி – கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

**-ராஜ்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *