டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்கள் குறித்து விராட் கோலி!

Published On:

| By Balaji

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்பாக கேப்டன் விராட் கோலி தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 51 ரன்னும், இஷான் கி‌ஷன் 70 ரன்னும் எடுத்தனர். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஐபிஎல்லுக்கு முன்பு சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தன. தற்போது லோகேஷ் ராகுலை டாப் வரிசையில் இருந்து கீழே இறக்குவது கடினமானது. ரோகித் சர்மா உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நான் மூன்றாவது வரிசையில் களம் இறங்குவேன். ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக விளையாடுவார். முதல் ஆட்டத்தில் எப்படி தொடங்க போகிறோம் என்ற அடிப்படையில் நாங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். பயிற்சி ஆட்டத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் பார்ப்போம்.

ஒரு குழுவாக ஆற்றலையும், வேகத்தையும் உருவாக்குவதுதான் தற்போது யோசனையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறோம். அதே ஆற்றலை உருவாக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், “சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பனியின் தாக்கம் ஆட்டத்தில் எதிரொலித்தது. இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் இரவே நடக்கிறது. இதனால் பனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். டி20 உலகக் கோப்பை போட்டியில் பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும்” என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும், “டி20 உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களில் பனியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வோம்.

மேலும், கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர் அல்லது வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவது என்பது குறித்தும் முடிவு செய்வோம். கடந்த இரண்டு மாதங்களாக இங்கு ஐபிஎல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். எனவே, அவர்கள் அதிகளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

பயிற்சி ஆட்டத்தில் எல்லோரும் பந்து வீசலாம். எல்லோரும் பேட்டிங் செய்யலாம். எனவே வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றி ஒரு யோசனை கிடைக்க அது நமக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் துபாயில் இன்று (அக்டோபர் 20) மாலை நடைபெறும் தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share